Sivaraj Parameswaran
அந்த ஐந்து நாட்கள் - இரண்டு
Updated: Aug 26, 2022

தடார் என்று கதவு சாத்தப்பட்டது, கீர்த்தனா நேரே பெட்டியை எடுத்துக்கொண்டு எனது அறைக்கு சென்றாள். "சாப்பிட்டு குளிக்கலாம்ல?" என்று நான் கேட்டதற்கு "இல்ல டா முதல்ல பிரெஷ் (Fresh) ஆகணும், பிளைட்ல (Flight) வேற வந்து இருக்கேன் எத்தன பேருக்கு கோவிட் இருந்ததோ?" என்று கூறி அவள் குளியல் அறைக்கு செல்ல. அவள் "எத்தன பேருக்கு கோவிட் இருந்ததோ?" என்று சொன்னது மட்டும் என் காதில் ரிங்காரித்தது. நேரே வாஷ் பேசின் சென்று பிரஷை எடுத்து நன்றாக இருமுறை பல் துலக்கி வெந்நீர் கொண்டு வாய் கொப்பளித்து நீராவி பிடித்து பயத்தில் கபாசுர குடிநீர் தயாரிக்க தொடங்கினேன்.
அதற்குள் அவள் குளித்துவிட்டு வந்தாள், டவ் (Dove) சோப்பின் மனம் அறையெங்கும் பரவியது. பரவிய மனம் என்னையும் கவர்ந்தது. கபாசுர குடிநீர் அணைத்து தூரே வைக்கப்பட்டது. பொம்மையை கண்ட நாய்க்குட்டி போல் அவளை பின்தொடர்ந்தேன். சோபாவில் அவள் அருகில் அமர காற்று சரியாக வரவில்லை என்று கூறி எதிரே போய் காத்தாடியின் (Ceiling Fan) கீழே அமர்ந்து கொண்டாள். என் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், சோபவில் கால் விரித்து படுத்துக்கொண்டே அவளை ரசித்தவாறு "எதுக்கு..." என்று கேட்க வாய்திறக்க அவள் "எதுக்கு சொல்லாம கொள்ளாம வந்தேன்னு தானே கேட்க போறே" ஆமாம் என்று தலை ஆட்டினேன், துண்டை தூரே எரிந்து என் அருகில் வந்து உட்கார்ந்து "தினேஷ் என்ன ஏமாத்திட்டான், அவன் ஆபீஸ்ல சுவேதாவோட..." என்று என்னை பார்த்து கண்கள் குலமாக என் தோளின் மீது சாய்ந்து தேம்பி அழ ஆரம்பித்தாள். நான் என்ன ஆறுதல் சொல்ல என்று யோசித்தேன்? காமம் துளிர்விட்ட என் மனதில் இப்பொழுது பரிதாபம் துளிர்விட தொடங்கியது. அவள் என்னை இறுக அனைத்து அழுதாள். அவளின் கண்ணீர் என் டீஷர்ட்டை ஈரமாக்கியது. பரிதாபம் சோகமாகியது.
சோகத்தில் அதிகம் பசிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், எனக்கும் பசித்தது. பசியில் வயிறு கர் புர் என்று வாய்வு சத்தம் எழுப்பியது. எழுப்பிய சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது, அழுது கொண்டிருந்த கீர்த்தனா நிமிர்ந்து "பசிக்குதாடா?" என்று பாவமாய் கேட்க, ஆமாம் என்று பாவமாய் தலை ஆட்டினேன். கண்ணீரை துடைத்துக்கொண்டு அடுக்களையிலிருந்து சாப்பாட்டை எடுத்து டைனிங் டேபிள் மீது வைத்து சாப்பிட அழைத்தாள். ஒரு பெண் அன்போடு சாப்பாட்டை எடுத்து வைத்து பாசமாய் கூப்பிடுவது சொர்கமே. இருந்தும் அடுத்தவன் மனைவியை இப்படி பார்ப்பது மனசாட்சிக்கு நெருடலாய் இருந்தது. உடனே மனசாட்சியை சிறிதும் யோசிக்காமல் கழட்டிவைத்து டைனிங் டேபிளிற்கு சாப்பிட சென்றேன்.
டிவியில் நியூஸ் சேனல் ஓடிக்கொண்டிருக்க, சாப்பிட்டுக்கொண்டே "உன்னோட பிளான் என்ன?" என்று அவளை பார்த்து கேட்டேன். எதுவும் பேசாமல் வாயில் சாதத்தை மென்றுக்கொண்டே ஒரு புரியாத பார்வை பார்த்தாள். அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் புருவத்தை உயர்த்தினேன்! எதுவும் பேசாமல் டைனிங் டேபிளிலிருந்து எழுந்து என் சாப்பிட்டு தட்டையும் சேர்த்து எடுத்து நான் வேண்டாம் என்று பல முறை கூறியும் தட்டுகளை அவளே கழுவினாள். அவள் கொண்டுவந்த பையை திறந்து மாம்பழங்களை எடுத்து கழுவி, தோலுரித்து துண்டு துண்டாக வெட்டி தட்டில் போட்டுக்கொண்டு எனது அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
அமைதியாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். டிவியில் பிரேக்கிங் நியூஸ் சத்தம் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தது, முள் கரண்டியால் அவள் மாம்பழ துண்டுகளை எடுத்து சாப்பிட எனக்கும் ஊட்டிவிட்டாள். மௌனம் தொடர்ந்தது. "எனக்கு உன் கூட நிம்மதியா ஒரு வாரம் வாழணும்" இதை கேட்ட எனக்கு பொறையேறியது. இரும்பல் அடங்க தண்ணீர் குடித்தேன். மூக்குவரை பொறை ஏறி எரிச்சல் எடுத்தது. "இட்ஸ் நாட் அபௌட் செக்ஸ், இட்ஸ் அபௌட் லவ் அண்ட் பீஸ்" (its not about sex, its about love and peace) என்று அவள் என்னை பார்த்து சொல்ல நான் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாகினேன். என் முகபாவங்களை கவனித்து "எனக்கு தெரியும் இது தப்புன்னு! பட் (but) உனக்கு புடிக்கலேனா சொல்லிடு! ஐ வில் லீவ் (I will leave)" என்று அவள் கூற, எனது மௌனம் தொடர்ந்தது.
எனக்கும் எனது மனசாட்சிக்கும் ஒரு பெரும் போரே அங்கு நடந்து கொண்டிருந்தது. நான் மௌனமாய் இருக்க அவள் தன் பையை எடுத்து வைக்க அறைக்கு சென்றாள். எனது போராட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. மனசாட்சி தோற்றது நான் வென்றேன். நேரே எழுந்து அறைக்கு சென்றேன் அவளை கட்டி அணைத்தேன், என் முத்தங்கள் மௌனகீதங்களாய் மாறியது, வானம் கறுத்தது, இடி முழங்கியது, மழை ஜோவென்று பெய்து காற்றோடு மண் கலந்து மண்ணோடு மழை கலந்து புது மழை வாசம் வீசியது. புது மழை அனல்காற்றை குளிரச் செய்து குளிர் காற்றாக மாற்றியது. ஜன்னல் கதவு காற்றில் பலமாக ஆடிக்கொண்டிருக்க, நேரம் வேகமாக நகர்ந்து இரவாகியது, காற்றின் வேகம் குறைய ஆடிக்கொண்டிருந்த ஜன்னல் கதவும் தோய்ந்து போய் நின்றது.
மழை மெதுவாக துளிர குளிர் காற்று வேகமாக வீச, கட்டிலிலிருந்து கீர்த்தனா எழுந்து அந்த ஜன்னலின் ஓரமாக வந்து நின்று அந்த குளிர் காற்றை அனுபவித்து ரசித்தாள். இருட்டிய அறையின் இருள் வெளிச்சத்தில் அவளின் அழகு என்னை மேலும் ஈர்த்தது. நான் லைட் ஸ்விட்சை ஆன் செய்ய எழுந்திருக்க! அவள் "வேணாம் டா, ஐ லைக் இட் திஸ் வே" (I like it this way) என்று கூற, நான் எதுவும் பேசாமல் அவள் அருகில் சென்று நின்றேன். என்னை பார்த்து அவள் சிரிக்க நான் அவளை பார்த்து சிரித்து அவளது முடியை கோதி விட்டேன் "என்னை கல்யாணம் பண்ணிப்பியா?" என்று அவள் என்னை பார்த்து கேட்க என் சிரிப்பு மெல்ல மறைந்தது. அவளின் முகம் மெல்லிதாக வாடியது, இருந்தாலும் சிரித்துக்கொண்டே "டென்ஷன் ஆகாதே டா, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்" என்று அவள் சமாளித்துக்கொள்ள, இதற்கு நான் என்ன பேசுவது என்று தெரியாமல் திரு திருவென்று முழித்தேன்.
மௌனம் தொடர்ந்தது. இருவரும் உடை மாற்றி கொண்டு ஹாலிற்கு வந்தோம். டிவியில் இன்னும் பிரேக்கிங் நியூஸ் தொடர்ந்து கொண்டிருந்தது. சாப்பிட ஸ்விக்கி முலம் ஆர்டர் செய்தோம். அந்த நீண்ட மௌனத்தை நான் கலைத்து "கீர்த்தனா நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்ல! எனக்கு உன்ன புடிக்கும்! ஆனா இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு!" என்ற படபடப்போடு சொல்ல, அவள் என்னை நக்கலாய் பார்த்து "எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு பெட் ரூம்ல இருக்கும் போது உனக்கு தெரியலியா?" அசிங்கத்தில் கூனி குறுகி "தெரிஞ்சது! நல்லாவே தெரிஞ்சது!! ஆனா உன் மேலே இருந்த ஆசை, லவ், வெறி என் கண்ணை மறைச்சுடுச்சு!!" என்று கசப்பாய் சொல்ல, அவள் எதுவும் பேசாமல் மௌனமாய் சோபாவில் அமர்ந்து, என்னை அருகில் வந்து உட்காருமாறு சமிக்கை செய்தாள். நானும் நல்ல பிள்ளை போல் சென்று அமர்ந்தேன். என் தோளில் சாய்ந்து கொண்டு "சாரி டா நான் சும்மா தான் கேட்டேன்! கோச்சிக்காதே!!" என்று குழந்தைத்தனமாய் பேசினாள். நானோ கொஞ்சம் சோகமாகி "நீ ரெண்டு வருஷம் முன்னாடி அம்மாவுக்கு உடம்பு சரி இல்லன்னு போனே! ஒரு மாசம் பேசவே இல்லே! போன் சுவிட்ச் ஆப்லே இருந்தது! ஒரு மாசம் கழுச்சு கல்யாணம்ன்னு சொல்லி வெட்டிங் இன்விடேஷன் அனுப்புனே! போன மாசம் திடீர்ன்னு கால் பண்ணி பேசினே! இன்னைக்கு என்னடானா கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேக்குறே? பைத்தியம் புடிக்குது தெரியுமா!!" "ஸுஷு" என்று கூறி அவள் என் உதட்டின் மேல் விறல் வைத்து என்னை அமைதியாக்கி என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். என் உள்ளங்கையை பிடித்துக்கொண்டு தோளின் மீது சாய்த்துக்கொண்டு "உன் கூட ஒரு வாரம் இருக்க போறேன்! பழைய படி நீயும் நானும் மட்டும் தான் ஓகே!" என்று கூறி என் உதட்டோரம் ஒரு முத்தம் கொடுத்தாள். அந்த ஒரு முத்தம் ஒரு முத்த மழையாய் மாறியது. அவள் கொடுக்கும் முத்தத்திற்கேற்ப ஸ்விக்கி பாய் வந்து கால்லிங் பெல் அடித்துக்கொண்டிருந்தான்.
அன்றிரவு இனிதே முடிந்தது.
மறுநாள் நான் தூங்கி எழுந்திருக்க 10 மணியாகிவிட்டது. எழுந்தவுடன் அருகில் பார்த்தேன், கீர்த்தனா இல்லை. நேற்று நடந்தவை கனவோ என்ற யோசனையில் ஹாலிற்கு வந்தேன் "குட் மார்னிங்" என்று கூறி என்னை வரவேற்று காபி தந்தாள். கனவல்ல நிஜம் என்று உணர்ந்தேன். அவளை பார்த்து ரசித்தேன். இவள் இல்லாமல் கடந்தது போன அந்த இரண்டு வருடம் இரண்டு நாள் போல் தோன்றியது. நாள் முழுவதும் அவளோடு சமைத்து, உண்டு, உருண்டு, விளையாடி அவளை ரசித்தேன்.
அன்று மாலை, கீர்த்தனா தனது கைபேசியை சுவிட்ச் ஆன் செய்தாள், நிறைய மிஸ்டு கால் இருக்கும் நிறைய மெசேஜ் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு ஆன் செய்தாள். ஆனால் அவளை யாரும் அழைக்கவும்மில்லை யாரும் அவளுக்கு மெசேஜூம் செய்யவில்லை. இரண்டு நாள் ஆகியும் தன்னை யாரும் தேடவில்லை என்பதை அறிந்து மேலும் வருத்தம் கொண்டாள். அதை வெளிக்காட்டாமல் பால்கனியிலிருந்து லாக்டவுனில் வெறிச்சோடிய சாலையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
நான் அவளின் அருகில் வந்து நின்றேன். என்னை பார்த்து சிரித்து மறுபடியும் அவள் பார்வை சாலையை நோக்கி திரும்பியது. 8 வது மாடியின் குளிர் காற்று எங்களை குளிர்ச் செய்தது. திரும்ப என்னை பார்த்து "ஒரு காபி போட்டுத்தறியா டா? ப்ளீஸ்" என்று அவள் சிணுங்கி கேட்க பொய் அலுப்போடு "2 மினிட்ஸ்" என்று வேகமாக சென்று காபி போட்டு எடுத்து வந்தேன். அவளை காணவில்லை, ஹாலிற்கு வந்தேன், ரூமிற்கு சென்றேன், திரும்பவும் ஹாலிற்கு வந்தேன், அவளை காணவில்லை. "கீர்த்தனா! கீர்த்தனா!" என்று ரூம் ரூமாக மறுபடியும் போய் பார்த்தேன் எங்கும் இல்லை. "ஆஆஆஆ" என்ற சத்தம் கீழிருந்து கேட்க பதற்றத்துடன் பால்கனி நோக்கி ஓடினேன். கீழே எட்டி பார்த்தேன், கையில் இருந்த காபி கப் தரையில் விழுந்து நொறுங்கியது...
தொடரும்....
இந்த பொய்க் கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.