Sivaraj Parameswaran
அந்த ஐந்து நாட்கள் - நான்கு
Updated: Aug 26, 2022

ரூடோ கதவை பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்க, நான் கைபேசியை எடுத்தேன். அம்மா தேம்பி அழுதுகொண்டே "டேய் மூத்தவன் கல்யாணம் நின்னு போச்சுடா! பொண்ணுக்கு வேற உறவு இருக்காம்! அதுல அவ இரண்டு மாசம் முழுகாம வேற இருக்கலாம்! அவன் இந்தியா வாரானாம்! வரதுக்குள்ள ஏதாவது எக்கு தப்பா பண்ணிட போறான்னு பயமா இருக்கு டா! அவனுக்கு போன் போட்டு பேசுயா! ஆறுதலா இருக்கும்!!" என்று அம்மா அண்ணனின் சோகம் சொல்ல என் சோகத்தை யாரிடம் குமுறுவது என்று கண்ணாடியை பார்த்து நின்று கொண்டிருந்தேன். கைபேசியை அனைத்து, சோபாவில் படுத்தேன். ரூடோ ஓடி வந்து எனது அருகில் படுத்துக்கொண்டது. என்னை ஆறுதல் செய்ய அதற்கு இயற்கை சொல்லிக்கொடுத்த வழியில் என்னை ஆசுவாசப்படுத்தியது. கீர்த்தனாவின் கைபேசியை தொடர்பு கொண்டேன். "நீங்கள் தொடர்பு கொள்ளும் மொபைல் எண் தொடர்பு எல்லையில் இல்லை தயவுசெய்து பின்னர் தொடர்பு கொள்ளவும்" என்ற பதிவுசெய்யப்பட்ட பெண் குரல் தொடர்நது ஒலித்துக்கொண்டே இருந்தது. மறுபடியும் பிளாக் செய்யப்பட்டு விட்டேன் என்பதை உணர்தேன். அப்படியே அயர்ந்து தூங்கிப்போனேன்.
யாரோ காலிங் பெல் அடிக்க நானும் ரூடோவும் எழுந்தோம். திறந்து பார்த்தேன், யாரோ ஒரு பெண் நின்றிருந்தாள் "யாரு வேணும்" என்று நான் கேட்க "ரூடோ...." என்று அவள் இழுக்க ரூடோ ஓடி வந்து அவள் மீது தாவிக்குதித்து. அவளை நக்கி வாலாட்டி தன் அன்பை தெரிவித்தது. அன்பில் அவனது அழுகையும் கலந்திருந்தது அவள் கண்களிலும் கண்ணீர் துளிகள் ததும்பி வழிந்தது. நிலமையை புரிந்தது, அவளாக நிதானத்திற்கு வந்து பேசட்டும் என்று நான் கதவை திறந்து உள்ளே அழைத்தேன். அவள் வந்து சோபாவில் அமர்ந்து ரூடோவை கொஞ்சினாள். நான் ரூடோவிற்கு கிண்ணத்தில் பால் கொண்டுவந்து வைத்தேன். பாலை கண்டும் அவளது மடியில் இருந்து ரூடோ இறங்கவில்லை, ரூடோ தனது கவலை எல்லாம் அவளிடம் சொல்லிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அவர்களை தனிமையில் விட்டு பால்கனிக்கு புகை இழுக்க போனேன்.
ரூடோவை பால் குடிக்க விட்டு அவள் பால்கனிக்கு வந்தாள். அவள் வர நான் புகையை மறைத்து அணைக்க முயன்றேன். அவள் "இட்ஸ் ஒகே! நானும் ஸ்மோக் பண்ணுவேன்!" என்று சொல்ல நான் சிகரெட்டை நீட்டினேன், ஒன்றை எடுத்து பற்றவைத்து வட்ட வட்டமாக புகை விட்டாள். நாங்கள் இருவரும் வெறிச்சோடிய அந்த பெங்களூர் சாலையை பார்த்துக்கொண்டே புகை பிடித்தோம். "டி சாப்பிடுறீங்களா?" என்று நான் கேட்க "பிளாக் டீ னா ஒகே" என்றாள். எனக்கு வேலை சுலபமாகியது. நான் இரண்டு பிளாக் டி போட்டுகொண்டு வர கூட ரூடோவும் வந்தான். "தேங்க்ஸ்" என்று கூறி டி கப்பை வாங்கி தரையில் உட்கார ரூடோ அவள் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. நானும் தரையில் அவளுடன் அமர்ந்தேன்.
டி குடித்துக்கொண்டே யாஷிகா பற்றியும் அருண் பற்றியும் அவர்களின் காதலையும் அதிலிருந்த மத பிரச்னையையும் அவர்களின் தற்கொலைக்கான காரணம் பற்றியும் அவள் சொல்ல ரூடோ அவள் மடியில் அமைதியாய் படுத்திருந்தது. நான் எதுவும் பேசாமல் அவள் கூறுவதை கேட்டு கொண்டிருந்தேன். சற்று நேர அமைதிக்கு பின் ரூடோவை எடுத்து செல்வதற்காகவே தான் வந்ததாக கூறினாள். நான் மறுப்பேதும் கூறாமல் அதே அமைதியுடன் இருந்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்க, நான் ஒரு வலுக்கட்டாய சிரிப்புடன் சரி என்று தலையாட்டினேன்.
நான் ரூடோவிடம் என் பிரிவை சொல்ல, ஏதோ புரிந்தவன் போல் இங்கும் அங்கும் சுற்றிப்பார்த்தான். "உங்க பெயரே சொல்லவே இல்லை" என்று அவளை பார்த்து கேட்க "நேஹா, நேஹா நாயர்" என்று சொல்ல அவள் ஒரு மலையாளி என்று தெரிந்தது. பேச்சு வழக்கில் அவளிடம் மலையாள சாயல் தெரியவில்லை எனினும் அவளின் உடல்மொழியில் நன்றாகவே தெரிந்தது. பதிலுக்கு "உங்க பெயர் என்ன" என்று கேட்க "சிவா, ஆனா முத்துக்குமார் தான் உண்மையான பெயரு சிவாங்கிறது வீட்டுல கூப்பிடற செல்லப் பெயரு!" சிரித்துக்கொண்டு "ஓகே" என்று கூறி ரூடோவை கூப்பிட்டாள். அவளிடம் ஓடிவந்தது. அவனை எடுத்து அவள் வெளியே செல்லும் பொழுது குரைத்து கூப்பாடிட தொடங்கியது, அவளிடமிருந்து திக்கித்திணறி தாவி குதித்து என்னிடம் ஓடி வந்து காலிடையே நின்று கொண்டது. நேஹா இதை கண்டதும் சிரித்துக்கொண்டு என்னை பார்த்தாள். நானும் சிரித்துக்கொண்டு அவளை பார்த்து "Don't worry நான் அவனை நல்லா பார்த்துப்பேன்" என்று சொல்ல அவள் செல்லமாக ரூடோவிடம் கோபித்துக்கொண்டு கொஞ்சினாள் "ரூடோ அவ்வளவு சீக்கிரமா யார் கிட்டேயும் ஒட்டிக்க மாட்டான்! உங்க கிட்ட இவ்வளவு கிளோஸ் ஆகணும்னா! யு மஸ்ட் பி ஸ்பெஷல் டு ஹிம்! (You must be special to him)" சிரித்துக்கொண்டே தனது பையை எடுத்துக்கொண்டு வெளியேற "சாரி உங்க மொபைல் நம்பர்? சோ தட் எதாவது தேவைனா! ஐ கேன் கால் யு!! (I can call you)" என்று கேட்க நான் நம்பரை கொடுத்தேன். மிஸ்ட் கால் கொடுத்தாள் நம்பரை நான் சேவ் செய்துவைத்தேன். அவள் விடைபெற்று செல்ல ரூடோ வாலாட்டி வழியனுப்பியது.
நேஹா, பாரதி கண்ட புதுமை பெண். தைரியம் உள்ளவள். சுய சிந்தனை உள்ளவள். அவளின் முதிர்ச்சி என்னை வெகுவாக ஈர்த்தது. காமத்தையும் காதலையும் நட்பையும் தெளிவாக புரிந்து அந்த மூன்றிற்கும் நூலளவே வித்யாசம் என்பதை எனக்கு நன்றாக புரியவைத்தவள். காமத்தையும் காதலையும் கலக்காமல் பிரித்து, நட்பை அதன் நடுவில் அரண் போல் வைத்து அந்த உறவுக்கு ஒரு பெயர் வைத்தால் அதுவே எங்கள் உறவின் பெயராக இருக்கும்.
வாரத்தில் இரு நாள் சந்திக்க வந்தவள் இப்பொழுது முழுநாளும் இங்கே தங்கலானாள். அவளோடு இருக்கும் நாட்கள் எனக்கு இனிமையை மட்டும் அல்லாது முழுமையையும் தந்தது. கீர்த்தனாவை முழுவதுமாக மறந்தேன். ரூடோவும் மடமடவென வளர்ந்தான். நேஹா நல்ல ஒரு நண்பியானாள்! எதை பற்றியும் பேசுமளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்தது. கீர்த்தனாவை பற்றி அவளிடம் சொன்ன பொழுது அவளை குறைகூறாமல் ஏதோ ஒரு காரணம் இருக்க கூடும் என்று அவள் சொன்னது என்னை சிந்திக்கச் செய்தது. நேஹாவை என்னை அறியாமல் விரும்ப தொடங்கினேன் இம்முறை அந்த உணர்வை என்னுள்ளே புதைந்து இருக்கச் செய்தேன். இன்னொரு காதல் தோல்வி வேண்டாம் அதற்கு நட்பே சிறந்தது என்று முடிவெடுத்தேன்.
ஏழு மாதங்கள் வெகுவேகமாக ஓடியது. அண்ணனுக்கு உள்ளூரில் ஒரு பெண் பார்த்து கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது. கல்யாண விருந்தில் அம்மா நேஹாவை பார்த்து என்னிடம் "பேசாம அவளை கட்டிக்கோயேன், பொண்ணு கலையா லட்சணமா வேற இருக்கா" என்று சொல்ல வாயில் விரல் வைத்து "சு..." என்றேன். நேஹா நேரே எங்களை நோக்கி வர அம்மா "இவனை கட்டிக்கிறியா மா, இவன் வாய் திறந்து கேட்கமாட்டான் அதான் நானே கேட்டுட்டேன்!" நேஹா சிரித்துக்கொண்டு என்னை பார்க்க நான் தர்மசங்கடமாக முழித்தேன், "அம்மா ஏன் மா இப்படி பண்றே, நீங்க போங்க நேஹா! அம்மா இப்படி தான் ஏதாவது சும்மா சொல்லி கலாய்ப்பாங்க!" அம்மா என்னை முறைத்துக்கொண்டு "டேய் நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன்?" "அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா" என்று அவளை சமாதானம் செய்ய, நேஹா சிரித்துக்கொண்டு "முதல்ல உங்க பையனுக்கு சம்மதமான்னு கேளுங்க?" என்று அம்மாவிடம் கேட்டு கை கட்டி நிற்க! விருந்துக்கு வந்த கூட்டம் என்னை திரும்பி பார்த்தது! ரூடோவும் வாலாட்டி கொண்டு என்னை பார்த்துக்கொண்டு அங்கே உட்கார்ந்தான். குபீர் என்று வேர்த்தது! என்ன சொல்ல என்று தெரியாமல் "சம்மதம்" என்று திக்கி திக்கி சொன்னேன். கூட்டம் கை தட்டியது. ரூடோ குரைத்தான். நேஹாவின் அப்பா அம்மாவும் அங்கிருக்க அவர்களும் சம்மதம் தெரிவித்து கைகுலுக்கினார்கள். ஒரு நொடி பொழுதில் காதலும் கல்யாண நிச்சயதார்த்தமும் முடிந்தது. கொரோனா காலம் என்பதால் அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் என்று பெரியோர்கள் தீர்மானித்தனர். அப்பாவிற்கு மட்டும் அவள் மலையாளி என்று ஒரு வெறுமை இருந்தது, பெரிதாக அவர் இதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை எனினும் அது எல்லோருக்கும் புலப்பட்டது.
மூன்று நாட்களில் மற்றுமொரு கல்யாணம் என்பதால் வேலைகள் அவசரம் அவசரமாக நடக்க தொடங்கியது. நானும் நேஹாவும் மாடியில் அன்று இரவு சந்தித்தோம், என்ன பேசுவது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன். அவளும் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். "நான் வந்து...." என்று நானும் அவளும் ஒரே சமயத்தில் பேச ஆரம்பிக்க, அவள் சிரித்துக் கொண்டே என்னை பேச சொன்னாள், பேச வந்ததை மறந்து விட்டேன் என்று கூறு அவள் என்னை அணைத்து ஒரு முத்தம் தந்தாள் "நேஹா....நேஹா....நேஹா...." என்று யாரோ கீழிருந்து அவளை அழைக்க முத்தத்தை நிறுத்தி என் கண்ணை பார்த்து "ஐ லவ் யு" என்று கூறி படியை நோக்கி ஓடினாள். அவளின் உதட்டின் சுவையும் லிப்ஸ்டிக்யின் சுவையும் என்னை குளிரச் செய்தது. கைபேசி ரிங்டோன்,
"பச்சை நிறமே பச்சை நிறமே..
இச்சை ஊட்டும் பச்சை நிறமே..
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே.."
...என்ற பாட்டு ஒலிக்க மாதவன் போல் துள்ளி குதித்தேன். சிரித்துக்கொண்டே கைபேசியை எடுத்து "ஹலோ" என்றேன் "என்ன டா எப்படி இருக்கே?" என்று பதில் வந்தது. அந்தக் குரல் என்னை ஒருநிமிடம் திணரச் செய்தது! திணறிக்கொண்டே "கீர்த்தனா?" என்றேன் "என்னடா நம்பர டெலீட் பண்ணிட்டியா என்ன?" நான் பதில் ஏதும் பேசாமல் இருந்தேன். குளிர் காற்றிலும் வேர்த்தது. "ஹலோ ஹலோ இருக்கியா?" என்று கேட்க தடுமாறி "இருக்கேன்!" என்றேன் "நான் இப்போ அங்க தான் வந்துட்டு இருக்கேன் பஸ்டாப்ல வந்து பிக் பண்றியா?" என்று அவள் கேட்க "நான் இப்போ பெங்களூர்ல இல்ல நான் ஊர்ல இருக்கேன்!" "தெரியும் டா ஐயர் மாமா உங்க அண்ணனுக்கு கல்யாணம்னு சொன்னாரு!! நான் இப்போ உங்க ஊருக்கு தான் வந்துட்டு இருக்கேன்! போன்ல பேட்டரி வேற லோ! இன்னும் ஒரு கால் மணிநேரத்துல ரீச் ஆகிடுவேன்....." என்று கூறிக்கொண்டிருக்க கால் கட் ஆகியது.....
தொடரும்....
இந்த பொய்க் கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.