Sivaraj Parameswaran
அந்த ஐந்து நாட்கள் - ஒன்று
Updated: Aug 26, 2022

வேலை இருந்தும் வேலை இல்லாமல் இருப்பது போன்றே இருந்தது. தினமும் காலை எழுந்து கணினி (கம்ப்யூட்டர்) முன் உட்கார வேண்டும். அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கேட்க வேண்டும். வேலை செய்யவிடாமல் தொடர்ந்து மீட்டிங் நடந்துகொண்டிருக்கும், நான் மீட்டிங்கை ஆன் செய்து அருகில் கதை படித்துக்கொண்டிருப்பேன். மாலை ஆனதும் மீட்டிங் முடியும் கதையும் முடியும். கணினியை மூடி அன்றைய வேலையை இனிதே முடிப்பதே வழக்கம்.
என்று போல் இன்றும் எனது மடிக்கணினியை எடுத்து என்ன கதை படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க எனக்கு ஒரு மின்னஞ்சல் (ஈமெயில்) வந்தது. நான் பணிபுரியும் நிர்வாகம் என்னை பணியில் இருந்து விடுவித் திருப்பதாகவும், பணப்பற்றாக்குறை காரணமாக இதை செய்ததாகவும், என்னை நிலைமையை புரிந்து கொள்ளுமாறும் அதில் விளக்கமாய் எழுதி இருந்தது. நானும் நிலைமையை புரிந்து கொண்டு மடிக்கணினியை மடியிலிருந்து இறக்கி வைத்து எனது ஆறாம் விறல் நண்பனான சிகரெட்டை தேடினேன். விட்ட பழக்கம் என்னை விட முடியாமல் விரட்டியது. புகை உள்சென்றவுடன் ஒரு அமைதி என்னை நிதானத்திற்கு கொண்டுவந்தது. விரல்சுடும் வரை புகைக்குடித்து அந்த பஞ்சை அணைத்து போது கைபேசி அடித்தது.
அம்மா அழைக்க நான் கைபேசியை எடுத்தேன். என் மூத்தவனுக்கு கல்யாணமாம். டெஸ்டினேஷன் வெட்டிங் பன்றானாம். கொரோனா காலம் என்பதால் கல்யாணத்தை யூடுப் மூலம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அம்மாவிடம் சொல்ல அவள் கவலையோடு அதை என்னிடம் கொட்டினாள். நான் சிரித்துக்கொண்டு கொரோனாவின் காலக்கொடுமை என்றெண்ணி என் நிலமையை எடுத்துரைத்தேன். அப்பா வர பிறகு அழைப்பதாக கூறி கைபேசியை அணைத்தாள்.
இன்ஸ்டாகிராம், யூடுப், பேஸ் புக் என்று நேரத்தை வீணடித்தேன். சலிப்புடன் யாரை அழைப்பது என்று கைபேசியை கையில் வைத்து யோசித்தேன். நான் முதலில் அழைத்தால், வேலை இல்லாமல் சும்மா இருக்கின்றேன் என்று நினைத்து விடுவார்களோ என்றறெண்ணி கைபேசியை கீழே வைத்தேன்.
ஒண்டிக்கட்டை என்பதால் வீட்டு வேலைகள் இருந்தது அதை செய்துமுடித்து, மதியத்திற்கு சாதமும் சாம்பாரும் ஒரு பொரியலும் முட்டை பொடிமாஸ்சும் செய்து விட்டு அலுப்புடன் டிவியில் என்ன இருக்கின்றது என்று பார்க்க ஆன் செய்தேன். பெங்களூர் என்பதால் நிறைய கன்னடமும் கொஞ்சம் தமிழ் சேனல்கள் தான் இருந்தது. இருந்த அந்த கொஞ்ச தமிழ் சேனல்களிலும், ஆயிரம் முறை பார்த்த அதே படங்கள் சலித்துக்கொண்டேன். என்னடா வாழ்க்கை என்று சேனலை மாற்றிக்கொண்டே நியூஸ் சேனலிற்கு வந்தேன், பிரேக்கிங் நியூஸ் "புதிய அறிவிப்பு இரண்டு வாரம் முழு அடைப்பு" என்றது. நேரக்கொடுமை என்று எண்ணி டிவியை ஆப் செய்து சோபாவில் சாய்த்தேன்.
கைபேசியில் வாட்ஸாப் குறுந்செய்தி வந்தது. யார் என்று சோம்பேறித்தனமாக எடுத்து பார்த்தேன். கீர்த்தனா "நான் பெங்களூர்ல இருக்கேன்! உன் போன் நாட் ரீச்சபில்ன்னு வருது" என்ற குறுந்செய்தி படித்து, கைபேசியை எடுத்து பார்க்க அங்கு நெட்ஒர்க் இல்லாமல் இருந்தது. நெட்ஒர்க்கை தேடி பாத்ரூம்வரை ஓடினேன்! பாத்ரூமிற்குள் நெட்ஒர்க் வந்தது, கீர்த்தனாவை அழைத்தேன், "டேய் வந்து கதவை திற டா" என்று அவள் கூற கால்லிங் பெல் அடித்தது.
நான் குழப்பத்துடன், கதவை திறக்க கீர்த்தனா பெட்டியுடன் அங்குநின்றிருந்தாள்! "என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்குறே? தனியாவா வந்திருக்கே? தினேஷ் வரலையா?" என்று நான் எட்டி பார்த்து கேட்க, அவள் ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு என்னை ஆரத்தழுவி உதட்டில் முத்தம் கொடுத்தாள். எதிர் வீட்டு ஐயர் மாமா வெளியே வர, இந்த காட்சியை பார்த்து "சிவா!! சிவா!!" என்று என் பெயரை இருமுறை கூறி தலையில் அடித்துக்கொண்டு "அம்புஜம் கதவை நன்னா சாத்திக்கோடீ...காலம் கேட்டு கெடக்கு" ஐயர் மாமா ஏன் சாத்துக்குடி கேட்கின்றார்? தினேஷுக்கு இவளுக்கும் டிவோர்ஸ்ஸா? இவள் இப்போ எனக்கு எதுக்கு முத்தம் கொடுக்கின்றாள்? என்ற பல குழப்பத்துடன் உதட்டில் முத்தத்துடன் வாசலில் நின்றிருந்தேன்.
வாசல் கதவு மெதுவாக அடைக்கப்பட்டது...
தொடரும்...
இந்த பொய்க்கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.