top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

அந்த ஐந்து நாட்கள் - மூன்று

Updated: Aug 26, 2022அந்த குளிர் காற்றிலும் எனக்கு வேர்வை துளிகள் முத்து முத்தாக பூத்தது, கீழே அவள் வெள்ளை சுடிதாரில் சிகப்பு உதிரத்தின் மீது படர்ந்து ஒற்றை காலை மடக்கி நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். எட்டாவது மாடியிலிருந்து பார்த்தபொழுது ரோஜாப்பூவின் மேல் அவள் தூங்குவது போல் தோன்றியது. வளர்ப்பு நாயுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒருவன் மற்றொருவரிடம் என்னை கை காட்டி மேலே பார்த்து பேசிக்கொண்டிருந்தான். என் கண்கள் மங்களாகியது, செய்வதறியாமல் தலையை பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தேன். தரையில் சிந்திய காபியின் சூடு என்னை சுட்டது.


தட தடவென ஒரு கூட்டம் வீட்டின் கதவை தட்ட நான் பதற்றமடைந்தேன். கூட்டத்தில் ஒருவன் கன்னடத்தில், "ஒரு பொண்ண கீழே தள்ளி கொண்ணுட்டு கதவ சாத்தி உட்கார்ந்திருக்கான்? சும்மா தட்டிட்டு!! கதவை அடிச்சு உடைங்கடா!!" என்று அவன் கோபமாக கத்த நான் பயத்தில் உறைந்தேன். கதவை திறக்க வேண்டுமா வேண்டாமா என்ற பதற்றம் என்னை நிலைகுலைய செய்தது. பித்து பிடித்தவன் போல் கத்தினேன் அழுதேன். கதவை தட்டும் சத்தம் பலமானது, கதவு உடைந்தது, அவர்கள் உள்ளே வர நான் பால்கனியின் மீது ஏறி நின்றிருந்தேன். கூட்டத்தில் ஒருவன் "ப்ரோ நோ ப்ரோ" என்று கூறி என் அருகில் வர முயல கூட்டத்தை திரும்பி பார்த்து பால்கனியிலிருந்து நான் குதிக்க முற்படும் பொழுது கீர்த்தனா "என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே?" என்று கூறியவாறு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். கூட்டம் அவளை திரும்பி பார்த்தது. நான் உறைந்து போய் நின்றேன். மேல் மாடியிலிருந்து ஒருவன் குதித்து கீழே விழுந்தான். கூட்டத்திலிருந்த அந்த ஒருவன் என்னை பிடித்து உள்ளே இழுத்தான். நான் பயந்து போய் நிற்க, கூட்டம் வீடு மாரி வந்து விட்டோம் என்பதை உணர்ந்தது.


கூட்டம் கலைந்து செல்ல அதில் ஒருவன் மட்டும் திரும்பி "ஏன் நீங்க பால்கனி மேலே ஏறி நின்னீங்க?" என்று என்னை பார்த்து கேட்க கீர்த்தனா சுதாரித்து "அது வந்து... நான் தான் கொடி கட்ட... ஆணி அடிக்க சொன்னேன்" "ஏம்மா எவ்வளவு நேரமா கதவ தட்டுறோம், உழுங்கா திறந்திருந்தா இப்படி உடைச்சு இருப்போமா?" "நான் பாத்ரூம்ல இருந்தேன், அவர்க்கு காது வேற சரியா கேக்காது! அதான்!!" என்று அவள் சமாளிக்க "ஓ செவிடா...சரி மா பார்த்துக்கோங்க... தம்பி நம்ம தச்சர போன் போட்டு வர சொல்லு" என்று அருகிலிருந்தவனிடம் கூறியவாறு வெளியே சென்றனர்.


அவர்கள் சென்ற பின் நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க கீர்த்தனா "இப்போ என்ன மயிர்க்கு சார் சாக போனீங்க?" என்று கேட்டு எனக்கு பளாரென்று ஒரு அரை வைத்தாள். நான் எதுவும் பேசாமல் இருக்க இன்னொரு அரை விழுந்த்தது. "ஏ மயிறு நீ செத்துட்டேன்னு நினைச்சுதான்டி நானும் சாகலாம் நினைச்சேன்" என்று கோபத்தில் அவளை பார்த்து கத்த "ஓ அப்போ நான் செத்தா நீயும் செத்துருவியா?" என்று அவள் கேட்க, கண்ணில் நீர் வழிய தேம்பி அழுதுகொண்டு "ஏன் டி இப்படி பண்றே! வலிக்குதுடி! நான் பாட்டுக்கு சிவனேன்னு எல்லாம் மறந்துட்டு இருந்தேன்! திடீருன்னு வந்து கல்யாணம் பண்றேன், லவ் பண்றேன், சாக போறேன்னு சொன்ன எப்படி டி?" என்று கூறி நான் தேம்பி தேம்பி அழ கீர்த்தனா உதட்டை கடித்துக்கொண்டு கண்ணில் நீர் வழிய தன் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு சோபாவில் சாய்ந்தாள். நான் அவள் மடிமீது சாய்ந்து "நானும் மனுஷன் தான்டி! உன்ன லவ் பண்றேன் டி! கல்யாணம் பண்ணனும் ஆசை படுறேன் டி! ஆனா பயமா இருக்குடி! நீ திரும்பவும் என்ன விட்டு போயிட்டேன்னா?" என்று கூற அவள் என் தலை முடியை வருடிக் கொண்டு "நான் உன்ன விட்டு இனி எங்கேயும் போக மாட்டேன் போதுமா!" என்று கூறி என் தலையில் ஒரு முத்தம் தந்து என் தலை மீது அவள் தலை வைத்து என்னை அனைத்துப் படுத்துக்கொண்டாள். டிவியில் ஜிகர்தண்டா பாட்டு ஓடிக்கொண்டிருந்தது,
"மோகத்தின் திரையை 
விளக்கி பார்க்க 
துணிவும் இல்ல 
சாயும் பகல 
குதிச்சு பார்க்க 
உசரம் இல்ல 

உன் தண்ணியில மூழ்கி 
கண்ணீரை சேர்த்து 
கைய ரெண்டும் ஏந்தி நின்னேன் 
ஒலி இல்லாம போன 
புல்லாங்குழலில 
துளையா மாரி நின்னேன்  

திசையும் இழந்தேனே 
திசையில சுழன்றேனே 
அசையும் என் உசுரும் எனதில்லையே..."

நானும் கீர்த்தனாவும் கீழே எட்டி பார்க்க, இருவரது சடலங்களும் ஆம்புலன்ஸ் வண்டியில் தனி தனியே ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. வெவ்வேறு ஜாதிகளின் சண்டையில் ஈருயிர் பிரிந்தது. இறந்து பின்னரும் பிணங்களை பிரித்து சென்றுகொண்டிருந்தனர். யாரோ அறியா இருவர் இறந்ததாக இருப்பினும் அந்த சோகம் எங்களை பாதித்தது. இரவு வரை வீடு இழவு வீடாக மாறியது.


இரவு மேல் மாடியில் ஒரே அடிதடி சத்தம், சத்தம் கேட்டு மேலே சென்று பார்க்க இரு வீட்டு குடும்பத்தாரும் சண்டையிட்டு கொண்டிருந்தனர். சேர்ந்த வாழ வாங்கிய சொத்துக்களை பிரித்து உண்ண வந்த பிணந்தின்னிகள் போல அவர்களின் சொத்துக்களை சொந்தங்கள் பிரித்துக்கொண்டிருந்தனர். அதில் அவர்கள் செல்லமாக வாங்கிய நாய் குட்டி பசியால் துடிக்க அதனை கண்டுகொள்ளாமல் பொருட்களை பிரித்துக்கொண்டிருந்தனர். அதன் அழுகையை தாங்கிக் கொள்ள முடியாமல் கீர்த்தனா நேரே சென்று அந்த நாய் குட்டியை எடுத்துக்கொண்டு கீழே வீடு நோக்கி இறங்கினாள். ஒரு நிமிடம் எல்லோரும் கீர்த்தனாவை பார்த்தாலும் நாயின் தொல்லை தொலைந்தது என்று சிரித்துக்கொண்டு அவர்கள் பிரிவினையை தொடர்ந்தனர்.


அந்த நாய்க்குட்டியின் கழுத்தில் "ரூடோ - ஐ பிலோங் டு ஆர்யா" (Rudo - I Belong To ArYa) என்று பொறிக்கப் பட்ட தகுடு இருந்தது. அதை திருப்பி பார்த்த பொழுது "ஆர்-அருண், யா-யாஷிகா" (Ar-Arun, Ya-Yashika) என்றெழுதி இருந்தது. கீர்த்தனா கண்ணீரோடு அதை பார்க்க, நாய்க்குட்டி ரூடோ இவளை நக்கி தன் அன்பை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது.


ரூடோவிற்கு ஒரு தட்டில் பால் கொண்டுவந்து வைக்க. மட மடவென குடித்தது. மேலும் ஒரு கப் ஊற்ற அதையும் குடித்தது. வயிறு நிறைந்த உற்சாகத்தில் ஓடியடா ஆரம்பித்தது. ரூடோவின் உற்சாகம் எங்களையும் உற்சாகப்படுத்தியது. நாங்களும் அதனுடன் ஓடி ஆடி விளையாடினோம். விளையாடிய களைப்பில் நாங்கள் சோபாவில் அமர ரூடோ மட்டும் பால்கனி அருகே சென்று தலையை தொங்க விட்டு அவ்விருவர் இறந்த இடத்தை கண்டு ஓ வென்று ஊளையிட்டு சிணுங்கியது. ரூடோ நாயாக பிறந்தாலும் அதற்கும் பாசம் உண்டு என்ற உணர்வை முதல் முறையாக நாங்கள் நேரில் கண்டோம். நாங்களும் ரூடோவுடன் அதன் சோகத்தை பங்கு கொண்டு அதன் அருகில் சென்று படுத்துக்கொண்டோம். நான் பால்கனி தடுப்பு கம்பியின் மீது சாய்ந்து உட்கார கீர்த்தனா என் மடி மீது படுத்துக்கொண்டாள். ரூடோ கீர்த்தனா அருகில் வந்த படுத்துக்கொண்டான். நான் கீர்த்தனாவின் தலையை கோதிவிட, கீர்த்தனா ரூடோவை வருடினாள். அந்த நிலா வெளிச்சத்தில் எட்டாவது மாடியின் குளிர் காற்றில் நாங்கள் எங்கள் கவலைகளை மறந்து நிம்மதியாக உறங்கினோம்.


விடியற்காலை 6 மணிக்கு கீர்த்தனாவின் கைபேசியும் எனது கைபேசியும் ஒரே சமயத்தில் ஒலிக்க, தூக்கம் கலைந்து எழுந்தோம். சோம்பல் முறித்து நான் பொறுமையாக எழ கீர்த்தனா ஓடி சென்று அவள் கைபேசியை எடுத்தாள். என் கைபேசியில் அம்மா அழைத்திருந்தாள், இது வழக்கமான அழைப்பு பின்னர் அழைத்துக்கொள்ளலாம் என்று கைபேசியை மேஜை மீது வைத்தேன். ரூடோ கொட்டாவி விட்டு பசிக்குது சாப்பிட கூடு என்பது போல் என் கால் பின்னே சுற்றி கொண்டிருந்தான். கீர்த்தனா தனது கைபேசியில் ஏதோ முக்கியமாக பேசிக்கொண்டிருப்பதை நான் கவனிக்க அவள் அறை கதவை மெல்ல சாத்தினாள். ரூடோவிற்கு பால் வைத்து விட்டு, என்ன என்று விசாரிக்க கதவருகே சென்றேன் ஆனால் ஏனோ கதவை தட்ட விருப்பமில்லாமல் பால்கனிக்கு வந்தேன். ஐந்து அறிவுஜீவிகளுக்கு நம் சோகம் தெரியுமோ என்னவோ நான் குழப்பத்தோடு பால்கனியில் சிகரெட்டை பற்றவைத்து நிற்க பாதி குடித்த பாலை அப்படியே விட்டு எனது அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான் ரூடோ. நான் அவனை பார்க்க அவன் என்னை பார்த்து நாக்கை தொங்கவிட்டு சிரித்து வாலாட்டிக் கொண்டு அவன் மொழியில் குரைத்துக்கொண்டிருந்தான்.


கீர்த்தனா கதவை திறந்து கையில் பையோடு வெளியே வந்தாள், நான் சிகரெட்டை அணைத்து "என்ன ஆச்சு? எங்க பையோடு கிளம்புறே? நான் கேட்டுட்டு இருக்கேன்ல?" என்று அவள் கையை பிடிக்க, என் கையை தட்டி விட்டு பதில் எதுவும் பேசாமல் என்னை திரும்பி பார்க்காமல் ஹாலில் இருந்த சார்ஜ்ரை கழட்டி பையில் வைத்து நேரே கதவை திறந்து வெளியேறினாள். சோகத்தோடு நானும் ரூடோவும் அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தோம். இரண்டு வருடம் முன்பு கீர்த்தனா இதே போல் சென்றது ஞாபகத்திற்கு வந்தது. ரூடோ குரைத்துக்கொண்டிருக்க கதவு தானே அடைந்தது.


சோகத்தில் நான் சோபா மீது சாய எனது கைபேசி மறுபடியும் ஒலித்தது....


தொடரும்...


இந்த பொய்க் கதையை எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.

0 views0 comments
bottom of page