Sivaraj Parameswaran
இன்சாட் - 778969
Updated: Aug 26, 2022
ஆசைகள் குறையாமல் என்றும் வாழ்வேன் என்று நினைத்த எனக்கு, புதிராக எதிராக வந்ததது புதிய அரசியல் சட்டம். இன்று முதல் நீர் ஒருவருக்கு 100 மில்லி தான் தரப்படும் என்றும் சுவாசிக்க காற்று 200 மில்லி தரப்படும் என்றும் மாதத்தில் ஒரு முறை மட்டும் வெளியுலகம் சென்று சுற்றி வர அனுமதி என்ற புதிய சட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது என்பதை, நான் ஒரு மாதம் நித்திரை கழித்து விழித்தவுடன் தெரிந்துகொண்டேன்! சொல்ல மறந்துவிட்டேன் நான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் குடிமகன், என் போன்றோர்களை ஒரு மாதம் நித்திரையில் கட்டாயப்படுத்தி தூங்கவைப்பது பதிவு. சிறை போலத்தான் ஆனால் சிறை இல்லை இதை இவர்கள் ஹோம் ஸ்லீப் ஸ்பேஸ் என்று அழைப்பார்கள். ஒரு மாத காலம் தூங்கிவிழித்தவுடன் ஒரு நாள் வெளியே செல்ல அனுமதிப்பார்கள்!! வெளியே சென்று வருவதென்பது ஊர் சுற்றுவதற்கு இல்லை ஒருமாத காலம் கழிவுகள் உடலில் தங்கி இருக்குமல்லவா அதை வெளியேற்றவே வெளியே அனுப்பிவைக்கின்றனர். காரணம் இல்லாமல் அரசாங்கம் ஒருவருக்கு உதவாது என்பதை தெரிந்துகொள்ளவும். தினம் தோறும் கழிவு வெளியேற்றம் என்ற காலம் போய் மாதம் தோறும் என்ற புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது.ஆம் அரசாங்கம் என்னை ஒரு மாத காலம் அவர்கள் கண்டுபிடித்த புதிய மருந்தினை செலுத்தி என்னை என் கட்டுப்பாடின்றி கட்டாயப்படுத்தி தூங்க வைக்கும். இதற்கு அவர்கள் வைத்த பெயர் கே-ஸ்லீப்.
இந்த புதிய டிஜிட்டல் உலகில் காற்றும் தண்ணீரும் உணவும் தவிர்த்து மற்ற எல்லாம் உள்ளது. இங்கிருந்து உலகின் எந்த மூலைக்கும் நொடிப்பொழுதில் பயணிக்கமுடியும் ஆனால் தண்ணீர் மட்டும் பஞ்சம்! இருந்த நல்ல தண்ணீரை எல்லாம் டிஜிட்டல் பயன் பாட்டிற்கு பயன்படுத்திவிட்டு இப்பொழுது சொட்டு சொட்டாக நாக்கை நனைத்து கொண்டுயிருக்கின்றோம். டிஜிட்டல் பயணப்பாட்டிற்கு என்றால்? உதாரணமாக ஒரு வாகனத்தை செய்யவேண்டும் என்றால் சுமார் 1,48,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. இங்கு உள்ள முக்கு மூலை ஒன்றுவிடாமல் இருந்த எல்லா தண்ணீரையும் எடுத்தாகிவிட்டது! இன்று வாகனம் உண்டு தண்ணீர் இல்லை முக்கியமாக யாரும் இப்பொழுது அதிவேகத்தில் எங்கும் பயணிப்பதில்லை. அவர்கள் தேவைக்கேற்ப பொறுமையாகவே பயணிக்கின்றனர்.
சராசரி சாகும் வயதை 28-ஆக குறைத்துள்ளது. அதாவது நீங்களாகவே 28 வயதிற்குள் செத்துவிடவேண்டும் இல்லா விட்டால் நீங்கள் கொள்ள படுவீர்கள். காரணம் தண்ணீர் உணவு பற்றாக்குறை. விலங்குகள் தாவரம் மீன்கள் பறவைகள் போன்ற இனம் மொத்தமாக அழிந்து விட்டது இப்பொழுது உள்ள உணவு மனிதன் புதிதாக கண்டுபிடித்த செயற்கை மாமிசம், இன்று அது மட்டுமே உயிரினமாக உள்ளது. அது மட்டுமே எங்களுக்கு உணவாகவும் உள்ளது.
இன்றும் கூட பெரும் பணக்காரர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். பணம் என்பது அதிகாரமாகவும் உணவாகவும் தண்ணீராகவும் மாற்றப்பட்டுள்ளது இது அவர்கள் இருப்பில் நிறைய உள்ளதால் அவர்களே இன்று பணக்காரர்கள், அதனால் இரவோடு இரவாக பணப்பரிமாற்றம் முற்றும் அழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் புதிய அறிக்கையை மூன்று வருடம் முன்பு அறிவித்தது. இதனால் பாதிக்க பட்டு பலர் இறந்தனர். இதைவிட கொடுமை என ஒரு புதிய சட்டம் வந்தது, அதாவது விவசாயம் செய்து உணவு உண்ணவும்! தாம்பத்தியம் உறவு வைத்துக்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் இன்று முதல் அவர்களுக்கே (அவர்கள் என்றால் உலகின் தலை சிறந்த 50 பணக்காரர்களும் அவர்களது சகாக்களும்) உரிமையும் உள்ளது. மற்றவர்கள் எல்லாம் (என்னை போன்றவர்கள்) அவர்களுக்கு வேலை செய்வதோடு சரி.
பணம் என்பது பழைய பண்ட மாற்று முறைக்கு புதிதாக மாரி உள்ளது. உணவின் அளவும் தண்ணீரின் அளவும் தான் பணம். இவர்கள் தான் அரசாங்கம். அரசாங்கம் தான் இவர்கள். ஜனநாயக முறைப்படி எனது மூதாதையர்கள் செய்த மிகப்பெரிய துரோகம் பணக்காரர்களாக இருந்த இவர்களை அரசாங்கமாக ஆக்கியது. எப்படி என்று கேக்கீரர்களா!! இருந்த அனைத்து பொதுத்துறையையும் தனியார்துறை ஆக்கிவிட்டீர்கள். போலீஸ்ஸும் பட்டாளமும் தனியார் மயம் ஆனா பிறகு சட்டமும் ஒழுங்கும் அவர்கள் கைக்கு சென்று விட்டது. ஜனநாயக அரசாங்கம் இன்று நாயக அரசாங்கமாகியது. இன்று மட்டும் அந்த புறம்போக்கு மூதாதையர்கள் இருந்திருந்தால் நிலைமை புரிந்திருக்கும் சொல்லமுடியாது இன்றும் கூட நக்கி பிழைக்கலாம் என்ற எண்ணம் வந்து நாயாக கூட்டத்திற்கு ஜால்ரா தட்டி வாழ்ந்தாலும் வாழ்ந்திருப்பார்கள். துரோகிகள்!
அரசாங்கம் அவர்கள் தேவைக்கு உள்ளவர்களை வேலைக்கு வைத்துகொள்வார்கள் மற்றவர்களை தேவைக்கேற்ப பாதுகாப்பு கருதி அவர்களை மருந்து கொடுத்து நித்திரையில் வைத்துக்கொள்வார்கள் ஒருவர் இறந்தால் மற்றவரை பயன் கொள்ளத்தான் இந்த ஏற்பாடு. இன்றைய நிலவரப்படி அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு எந்த மாற்றமும் இல்லை! தண்ணீர்! உணவு! குடும்பம்! காதல்! காமம்! உறவுகள்! எல்லாம் உண்டு. மற்றவர்களுக்கோ (அதாவது என் போன்ற அடிமை நாய்களுக்கோ) அப்படி ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரியாது!
பேச்சு திறன் அதாவது பேசும் திறனை எல்லோருக்கும் படிக்கவைப்பதில்லை! அதிகார வேலை ஆட்களுக்கு மட்டும் தான் பேச்சு திறன். மற்றவர்கள் பழைய காலத்தில் வாழ்ந்த ஊமை நாய்கள் போல குறைக்கலாம்! ஊளையிடலாம்! வேண்டுமென்றால் முன்பு வாழ்ந்து அழிந்த நாய்கள் போல குறைத்து, எஜமானனிடம் அவர்கள் விசுவாசத்தை காட்டி கொண்டு விசுவத்திற்க்கேற்ப உணவையும் தண்ணீரையும் வெகுமனாக பெற்றுக்கொள்ளாம்! சிலருக்கு முதலாளிகள் வீட்டில் உள்ள அறையில் தரையில் படுத்து உருள, கூடவே உண்டு உறங்க அனுமதியும் உண்டு! படிக்கவும் எழுதவும் உள்ள திறன் அரசாங்க அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் மட்டும் தான் உரிமை உள்ளது. சாமானியர்களுக்கு முற்றிலும் அந்த உரிமை மறுக்க பட்டுள்ளது. அதையும் மீறி ஏகலைவன் போல் யாராவது கற்று கொண்டால் நாக்கும் அறுக்கப்படும் விரல்கள் வெட்டப்படும். துரோணாச்சாரியாரின் புத்தி யுக்தி இன்றளவும் நிலுவையில் உள்ளது.
இப்படி பட்ட உலகத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்க நான் எப்படி இப்படி எழுதுகிறேன் என்று உங்களுக்கு தோன்றலாம். அது தான் என் விதி என் பிறவிப் பயன். வழக்கம் போல் அன்று எனது மாத வெளியேறும் நாள் வந்தது. ஒரு மாத கழிவுகளை வெளியேற்ற காட்டிற்கு ஓடினேன். தீடீரென்று காதை கிழிக்கும் சத்தத்துடன் பறக்கும் தட்டு ஒன்று என் தலைக்கு மேல் வந்தது. என் மீது ஒளி வட்டம் வீச நான் மிதந்துக் கொண்டு பறக்கும் தட்டிற்குள் சென்றேன். அங்கே வெள்ளை அறையில் ஒரு தட்டில் பச்சையும் சிகப்பும் கலர் கலந்து ஒரு ஆப்பிள் பழம் வைக்கப்பட்டிருந்தது. பசியில் அதை எடுத்து ஒரு கடி கடித்தேன். விஷம் ஏறிய தலை போல் என் நினைவுகள் முற்றிலும் வெள்ளை நிறமாக மாறியது.
கண் திறந்த பொழுது இன்று காலையில் இருக்கின்றேன் (குழம்பிப் போனவர்கள் மீண்டும் முதல் பத்தியை படிக்கவும்) அரசாங்கத்தின் புதிய ஆணை என்னை கதிகளங்கச் செய்தது. அது போக என்னால் பேச எழுத படிக்க யோசிக்க முடிந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சரி இதை யாரிடம் சொல்லலாம் என்று யோசித்தாலும் யாரிடம்தான் சொல்லவேன்? என்னருகே ஒரு பெண் நிர்வாணமாக தூங்கி கொண்டிருந்தாள். அப்பொழுது தான் நான் நிர்வாணமாக உள்ளேன் என்பதை உணர்ந்தேன். நிர்வாணத்தின் உணர்ச்சியை முதல் முறை உணர்கின்றேன். ஏவாள் சாப்பிட்ட ஆப்பிள் பழம் நினைவிற்கு வந்தது. நான் சாப்பிட்ட ஆப்பிள் பழமும் நினைவிற்கு வந்தது. எனது கைகள் எனது ஆண் குறியை மறைத்தது. நான் எங்கு இருக்கின்றேன் என்பதை சுற்றும் முற்றம் திரும்பி பார்த்தேன். ஒரு ராணுவக் காவல் அறை போல இருந்தது. சுத்தம் சோறு போடும் அளவிற்கு சுத்தமாக இருந்தது. நான் வெளியே வர அறை கதவுகள் தானகவே திறந்தது. ஒரு அறையாக வெளியே வர நான் நேரே அரசாங்க அதிகாரிகள் வாழும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். அது ஒரு திறந்த வெளி மாளிகை. அதிகாரிகளும் அதகாரச்சிகளும் நிர்வாணமாக ஆடி பாடி கொண்டிருந்தனர். என்னை கண்டவுடன் கோபமான ஒரு அரசாங்க அதிகாரி கையில் இருந்த லேசர் துப்பாக்கியை எடுத்து சுட, காதை கிழிக்கும் அதே சத்தத்துடன் பறக்கும் தட்டு மறுபடியும் வந்தது. மீண்டும் நான் அந்த ஒளியில் மிதந்து பறக்கும் தட்டிற்குள் இழுக்கப்பட்டேன். என் நினைவுகள் மீண்டும் முற்றிலும் வெள்ளை நிறமாக மாறியது.
கண் திறந்து பொழுது நான் ஒரு புதிய உலகில் இருப்பதை உணர்ந்தேன். உடலில் ஆடை! முகத்தில் தாடி! நாற்றம் பிடித்த காற்று! சுற்றும் முற்றும் அசிங்கம்! மனிதர்கள் ஆட்டு மந்தைகள் போல் வாழ்வதற்கான இடம் போல் இருந்தது! எந்த இடம் என்று தேட தேதி கண்ணில் பட்டது. செப்டம்பர் 12 2021. எந்த இடம் என்று தேட இங்கு உள்ளவர்கள் கூகுளை பயன் படுத்துவதாக எனது ப்ரோக்ராம் செய்யப்பட்ட மூளை எனக்கு உணர்த்தியது. தேடிய பொழுது முற்றிலும் வேறு இடம் வேறு பிரபஞ்சம் வேறு உலகம் என்பதை உணர்தேன். நாட்டின் நிலவரம் அறிய நியூஸ் சேனலை பார்த்தேன் "நாட்டின் நலன் கருதி பொதுத்துறைகளை தனியார்களுக்கு விற்க அரசாங்கம் தீர்மானம்" செய்தி வாசிப்பவர் பரபரப்புடன் நியூஸ் வாசித்துக்கொண்டிருந்தார். நான் சிரித்துக்கொண்டே சேனலை மாற்ற ஒரு பெண் குறைந்த ஆடையுடன் தன் அங்கங்களை காட்டிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார் நான் அதை ரசித்துக்கொண்டே இந்த பழைய செய்தியை மறக்கலானேன்...
பின் குறிப்பு : இதை நான் அமெரிக்காவில் வந்து இறங்கிய பொழுது ஆங்கிலத்தில் தான் எழுதினேன்! இதை தமிழில் எழுதியவர் பெயர் கீழே இந்த பேஜ்ஜின் இறுதியில் உள்ளது! நான் நியூஸ் சேனலலில் பார்த்ததாக சொன்ன செய்தி அமெரிக்கா தொலைக்காட்சின் முக்கிய செய்தி நிறுவனமாக விளங்கும் Fox News Channel-லாகும். அதில் அமெரிக்க பொதுத்துறை நிறுவனங்கள் ஏலத்தில் விடப்பட்ட செய்தி தான் நான் சொன்ன செய்தி.
இப்படிக்கு வேற்று கிரகவாசியாக அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும்,
இன்சாட் - 778969.
ஒரு மாதத்திற்கு முன்னர் இன்சாட் - 778969 சென்னை வந்திருந்த பொழுது மெரினா கடற்கரையில் வாக்கிங் செய்து கொண்டிருந்தார். அன்று நானும் வாக்கிங் செல்ல எதற்ச்சையாக அவரை கண்டு பரிட்சயம் அடைந்தேன். நன்றாக பழகிய பின் அவர் கூறிய கதைகளை எழுத்துமாறாமல் அச்சு அசலாக அப்படியே எழுதியது. இன்று அவர் இந்த பூமியில் இல்லை மறுபடியும் பறக்கும் தட்டுக்காரர்களால் வேறு கிரகமோ பிரபஞ்சத்திற்கோ சென்றிருப்பார் அல்லது கடத்தப்பட்டிருப்பர் என்று எண்ணுகின்றேன். யாராவது அவரை கண்டால் அல்லது தொடர்பு கொண்டால் என்னை அணுகவும். பார்ப்பதற்கு அவர் என்னை போன்றே இருப்பார் ஆனால் அது நான் இல்லை. குறிப்பிற்கு அவரது புகைப்படத்தை இதில் இணைத்துள்ளேன். தாடி உள்ள புகைப்படமும் தாடி இல்லாத புகைப்படமும் கண்ணாடி உள்ள புகை படமும் கண்ணாடி இல்லாத புகைப்படமும் இணைத்துள்ளேன். பார்த்து உணர்ந்து கொள்ளவும் அது நான் இல்லை அவர் பெயர் இன்சாட் - 778969. அவர் வேறு நான் வேறு தயைகூர்ந்து புரிந்துகொள்ளவும்.
இப்படிக்கு நன்றிகளுடன்,
சிவராஜ் பரமேஸ்வரன்.