Sivaraj Parameswaran
ஒன்கனிக்கோவ்
Updated: Aug 26, 2022

இந்த உலகை வெறுக்கும் நான் அதை எப்படி நேசிப்பது என்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில் ரோஷமோன் ஓடிவந்தான், "ஒன்கனிக்கோவ் அரசன் நாக்கோவை இழுத்துக்கொண்டு சிரசம்ஹாரம் செய்யும் இடத்திற்கு கொண்டுசெல்கின்றான். கூட தளபதி அக்கிராவும் உள்ளான், நாக்கோ உன்னுடன் புணர்ந்தததால் அவளுக்கு இந்த தண்டனை என்று ஊரார் பேசிக்கொள்கின்றனர், நீ நாக்கோவை எப்படி காப்பாற்ற போகிறாய்?" கண்ணீருடன் பதுங்கு கோபுரத்தின் ஜன்னலின் வழியாக பார்க்க நாக்கோவை மண்டியிட்டு கைகளை பின்னம் பக்கம் மடித்து கட்டிவைத்து அவள் செய்த குற்றத்தை உரக்க வாசித்துக்கொண்டிருந்தனர், "அரச குலத்தில் பிறந்து ஈனப்பிறவியுடன் புணர்ந்து அரச குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதால் சிரச்சேதம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதற்கு முன் அவளை கல்லால் அடிக்க விருப்பம் உள்ளவர் அவளை கல்லால் அடிக்கலாம். இந்த கணம் முதல் இவள் அரசனின் தங்கை அன்று இவள் இப்பொழுது மிருகத்தினும் கீழானவள்"
ஒன்கனிக்கோவாகிய நான் அவள் துன்பப்படுவதை கோபுரத்தில் இருந்து பயந்து ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்தேன், உதிர மழையால் நனைந்து கொண்டிருந்த நாக்கோவிடம் தளபதி தனது காமப்பார்வையால் "இப்பொழுது ஒரு வார்த்தை சொல், என்னை விரும்புகிறாய் என்று!! மறுநொடியே உன்னை இந்த கொடுமையிலிருந்து காப்பாற்றுகிறேன்!!" ரத்தம் சொட்ட சொட்ட நாக்கோ தளபதி அக்கிராவை பார்த்து சிரித்து "என்னை நிர்வாணமாக்கினாய், துன்புறுத்தினாய், கற்பழித்தாய்! இவை அனைத்தையும் என் அனுமதியின்றி செய்தாய்! ஆனால் அகிரா உன்னால் என் அனுமதியின்றி என் காதலை பிறமுடியாது! வேண்டுமானால் என் சிரசத்தை வெட்டி அந்த முகத்தை வேறொரு பெண்டிர்க்கு அணிவித்து உனது காதல் ஆசையை தீர்த்துக்கொள்! என் காதல் இந்த வாழ்நாளில் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் சொந்தம்" என்று அவள் கூற, கோபமான அகிரா பணியாட்களுக்கு ஆணை இட கத்தி நாக்கோவின் சிரசத்தை வெட்டி துண்டாக்கியது.
அகிரா என்று கத்திகொண்டே குதித்தேன், சீட்டில் என்னை பெல்ட்டால் கட்டிவைத்திருந்தனர். டாக்டர் என்னை கட்டுப்படுத்த சிஸ்டரை கூப்பிட்டார்! "சிஸ்டர் அந்த ரவி கம்பௌண்டரை கூப்பிடுங்க! patient violent ஆகிட்டார்!" டாக்டரும் ரவியும் சேர்ந்து என்னை ஊசி போட்டு தூங்க வைத்தனர்.
கண்கள் அயர்ந்து தூங்கியவுடன், கலீலிலோ ஓடிவந்து "டெல்மோண்டே உனக்கு விவரம் தெரியுமா மெக்பெத்தை கடத்திவிட்டார்கள் சீக்கிரம் வா நாம் தான் படை திரட்டி அந்த ரோமானிய அரசுக்கு பாடம் புகட்டணும், டெல்மோண்டே! தூங்கியது போதும் எழுந்துரி டெல்மோண்டே! டெல்மோண்டே!!!!......."
எழுதியது,
ஒன்கனிக்கோவ்
அட ச்சே மறந்துட்டேன்,
டெல்மோண்டே
அட ச்சே திரும்பவும் மறந்துட்டேன்,
சிவராஜ் பரமேஸ்வரன்
அட ச்சே, என் பெயரு என்னென்னெ மறந்துட்டேனே?
சரி எழுதியது யாரோ!
எழுதுனவனா முக்கியம்!
கதை தானே முக்கியம்!