Sivaraj Parameswaran
ஒரு சராசரி இந்தியனின் கதை!
Updated: Aug 26, 2022

சுரேஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச துடங்கியது! சுரேஷ் பக்கத்து வீட்டில் இருக்கும் பாலாவின் மனைவி மூக்கை பிடித்துக்கொண்டு கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்த பாலாவிடம் "ஏங்க!! சும்மா அதை தட்டி கிட்டே இருக்கீங்களே! இங்க என்ன நடங்குதுன்னு கொஞ்சம் கவனிக்க கூடாதா?" பாலா ஹெட் செட்டை கழட்டி "ஏம்மா நான் என்ன கேம்மா விளையாடுறேன்? வேலை பாக்குறேன் மா!!" முந்தானையால் மூக்கை பொத்திக்கொண்டே "சுரேஷ் வீட்டுல ஒரே நாத்தம் அவரு ஊருக்கு போய் நாலு நாளாச்சாம்! ஏதாவது எலி செத்துக்கிடக்கும் போல கொஞ்சம் போய் என்னன்னு பாருங்களேன்!!" திரும்பவும் ஹெட் செட்டை கையில் எடுத்து "வேற வேலை இல்ல! அவன் வீட்டுக்கு நான் போறதா? ஏன் நான் மட்டும் தான் இந்த அஸோஸியேஷன்ல இருக்கேனா? நீ போய் உன் வேலைய பாரு!" என்று கொஞ்சம் கோபத்துடன் கூறி தனது கம்ப்யூட்டரை முணுமுணுத்துக்கொண்டே மறுபடியும் தட்ட ஆரம்பித்தான் பாலா! திருந்தாத ஜென்மங்கள் என்பது போல தலையை அடித்துக்கொண்டு மூக்கை பொத்திக்கொண்டு பாலாவின் மனைவி அடுக்களையை நோக்கி சென்றாள். அவள் சென்ற பிறகு பாடி ஸ்பிரேயை திரும்பவும் ரூமில் அடித்து வேலையை தொடர்ந்தான் பாலா.
ஒரு தெரு நாய் சுரேஷ் வீட்டின் முன் நின்று குறைத்துக்கொண்டே இருந்தது! வீட்டை கடந்து போவர் அனைவரும் துர்நாற்றம் சகிக்காமல் மூக்கை பொத்திக்கொண்டே சென்றனர். குடிகாரன் ஒருவன் நாயின் குறை சத்தம் தாங்காமல் நாயின் மீது கல் எரிந்தான். நாய் சற்று தூரம் சென்று மீண்டும் சத்தமாக குறைத்து. அங்கு டி குடிக்க வந்த போலீஸ் கான்ஸ்டபிளும் சப் இன்ஸ்பெக்டரும், நாய் எதற்கு குறைகின்றது என்று பார்க்க. அங்கு குடிகாரன் நடு ரோட்டில் டான்ஸ் ஆடி கொண்டிருந்தான். கான்ஸ்டபிள் "சார் ஏதோ தண்ணி கிராக்கி!" சப் இன்ஸ்பெக்டர் எட்டி பார்த்து பொழுது குடிகாரன் குட்டி கரணம் போட்டு கொண்டிருந்தான். கான்ஸ்டபிள் இரண்டு பட்டர் பிஸ்கட் எடுத்து நாயிடம் எடுத்து எரிய. நாயின் குறை நின்றது. பட்டர் பிஸ்கட்டை பொடி பொடியாக்கி கடித்து விழுங்கியது.
அசோஸியேஷனில் நாற்றம் பற்றிய விவாதம் துடங்கியது. சுரேஷ் வீட்டை யார் திறப்பது என்பது தான் விவாதம்! சுரேஷ் ஒரு அனாதை! எந்த குலம் எந்த சாதி என்ன மதம் என்றனவெல்லாம் யாருக்கும் தெரியாது. சிவா சங்கராச்சாரி பெரிய பட்டர் சுப்ரமணியர் அவர் காலம் முடிந்து தான் வளர்த்த இந்த சுரேஷை வாரிசாக அறிவித்து, தான் கடைசி காலத்தில் வாழ்ந்து வந்த வீட்டையும் எழுதி வைத்து விட்டார்! இதை சற்றும் எதிர் பாராத சமூகம் அதை எதிர்த்தது அதாவது அசோசியேஷன் எதிர்த்து! அதன் விளைவாக சுரேஷை விலக்கி வைத்தது! இன்று சுரேஷ் வீட்டில் நாற்றம், என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தது.
சுரேஷ் வீட்டின் கழிவறையின் காற்று போகும் வழியில் புல் கூடு கட்டி முட்டையை அடைகாக்கும் புறா தனது ஓரக்கண்ணால் கழிவறையில் உயிரற்று தரையில் படுத்துக்கொண்டிருக்கும் சுரேஷை பார்த்து குறு குறு குறு என்ற தனது மொழியில் அனுதாபத்தை தெரிவித்தது. நாலு நாள் முன்னர் தனது சொந்த ஊருக்கு போக தயார் ஆகும் பொழுது எண்ணெய் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு துடிதுடித்து சுரேஷ் இறந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகின்றது.
அசோசியேஷன் விவாதம் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது, அம்பேத்கர் காலனி வாலிபர்களை வரவைக்க தீர்மானம் நிறைவேற்ற பட்டது!
இது ஒரு உண்மையான பொய் கதையும் அல்ல!
மாறாக இது ஒரு பொய்யான உண்மை கதையும் அல்ல!
இது ஒரு சராசரி அனாதையாக பிறந்த இந்தியனின் கதை!
எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.