top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

ஒரு மொட்டை மாடி கதை - அத்தியாயம் 1

Updated: Aug 26, 2022



விடியற்காலை 3 மணி, கனவு என் தூக்கத்தை கலைத்தது. தாகம் கொண்டு நாவு தளதளர்த்தது, அரை பாட்டில் தண்ணீர் தொண்டையை குளிரச்செய்தது. தூக்கம் கலைந்ததால் கொஞ்சம் காற்று வாங்க எனது அறையின் கதவை திறந்து எதிரே உள்ள ஆள் இல்லா மொட்டை மாடிக்குச் சென்றேன். தெரு விளக்கில் சாலை வெள்ளையாய் மின்னியது. எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள அந்த சாலைச்சந்தை இப்பொழுது கொரோனவால் மயான அமைதியாய் இருந்தது. எங்கோ மழை பெய்ய இங்கு குளிர் காற்று என்னை குளிரச்செய்தது.


தரை சில்லென்று இருக்க செருப்பை அணிந்துக்கொண்டு கொசுக்களை கைதட்டி கொன்று இருட்டை கடந்து தண்ணீர் தொட்டியின் மீது ஏறி உட்கார்ந்தேன். தூரே மேகத்திற்குள் மின்னல் வேகமாக சீறியது. அந்த மின்னல் வெளிச்சத்தில், சிகப்பு நிற சுடிதார் அணிந்து ஒருவள் என் அருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயத்தில் ஐயோ என்று அலறி தண்ணீர் தொட்டியிலிருந்து தரையில் விழுந்தேன். அவள் மெல்ல புன்முறுவினாள். மின்னல் சற்று கோபமாக சீற அவளின் முகம் தெளிவாக தெரிந்தது, பேய் தேவதையாய் தெரிந்தாள்.


இம்மியளவு பயம் குறையாமல் "யார் நீ? இங்க இந்த நேரத்துல என்ன பண்றே?" என்று நான் முச்சு இறைக்க கேக்க. அவளோ எதுவும் பேசாமல் எதிர் திசையில் உள்ள செல்போன் டவர் ஒன்றை காட்டி "இந்த இருட்டுல, கருப்பு நீல வெளிச்சத்துல செல்போன் டவர், பர்ரிஸ் டவர் மாதிரி என்ன அழகா இருக்குல?" என்று அவள் கூற! லூசாக இருப்பாளோ என்று குழம்பிபோய் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தேன். நான் முழிப்பதை பார்த்த அவள், "நான் செகண்ட் புளோர் சிவகாமி பாட்டியின் பேத்தி, வேகேஷனுக்கு வந்த இடத்துல கொரோனா லாக்டவுன்ல மாட்டிகிட்டேன்".


எட்டி அவளது கால்களை பார்த்தேன், மனதிற்குள் "அப்பாடா கால்கள் இருக்கு பேய் இல்ல" என்று எண்ணியவாறு தண்ணீர் தொட்டியின் மீது ஏறி ஓரமாக ஒரு மூலையில் உட்கார்ந்தேன். பெண் என்று தெரிந்த பிறகு அதுவும் அழகான பெண் என்று தெரிந்த பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிக்கொண்டே "நீங்க சென்னைல எங்க இருக்கீங்க" என்ற ஒரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டேன். அவளும் சிரித்துக்கொண்டே "நான் சென்னைல இல்ல பிளோரிடால இருக்கேன். அப்பா அம்மா அங்க இருக்காங்க. இந்த முறை கொரோனா தொற்று காரணத்தால அப்பா அம்மா வரல. நான் பாட்டிய கூப்பிட்டு போலாம்னு வந்தேன். வந்த இடத்துல மாட்டிகிட்டேன்!" என்று சோகமாக சொன்னாள்.


அவள் சொன்னவற்றை கேட்டு விட்டு அமைதியாய் இருந்தேன். சில நிமிடங்கள் கடந்தும் அமைதி தொடர்ந்தது. அவள் மூன்று முறை திரும்பி பார்த்தாள். மூன்று முறையும் அவளை பார்த்து சிரித்தபடி அமைதியாய் இருந்தேன். என் அமைதியின் கோழைத்தனத்தை அறிந்து அவளாக பேசினாள் "நீங்க என்ன பண்றீங்க?" நான் சற்றும் எதிர்பார்க்காத கேள்வி "ஐ வாண்ட் டு... பிகம் எ... பிலிம் மேக்கர் (I want to become a filmmaker)" என்ற விண்ணை தண்டி வருவாயா கௌதமின் டயலாக்கை திணறியபடி சொன்னேன்.


"வாவ் சூப்பர்" என்று சொல்ல, எங்கோ என்னை அறியாமல் ஒரு பெருமை என்னை ஆட்கொண்டது. தொடர்ந்து அவள், "நானும் NYFA-ல தான் (நியூயார்க் பிலிம் அகாடமி) பிலிம் மேக்கிங் கோர்ஸ் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்னவுடன் சற்றுமுன் முளைத்த என் பெருமை சிறகுகள் எரிந்து பஸ்மாமாகியது. "உங்களுக்கு புடிச்ச பிலிம் மேக்கர் யாரு?" என்று கேட்க "பாலுமகேந்திரா" என்று சற்றும் தளராமல் சொன்னேன். "வாவ் சூப்பருங்க! எனக்கு அவரு படங்கள் எல்லாம் ரொம்ப புடிக்கும்! முக்கியமா மூன்றாம் பிறை, அப்பரும் தட் மலையாளம் மூவி யாத்ரா. வண்டர்புல் பிலிம் மேக்கர் ஹி இஸ்!"


பெருமையோடு கர்வம்கொண்டு "அவர்கிட்ட தான் பிலிம் மேக்கிங் கத்துக்கிட்டேன்" என்று சொல்ல அவள் இன்னும் கண்கள் விரிய, "சினிமா பட்டறை" "ஆமாம்" "யூ ஆர் வெரி லக்கி மேன்!" என்று சொல்லி அவள் என்னை தோளில் செல்லமாக தட்டினாள் எனக்குள் ஏதோ சில்லு சில்லுத்தது.


விடியும் வரை நாங்கள் சினிமாவை பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். என் வாடகை வீட்டின் வாழ்நாளில் முதல் முறையாக என் மொட்டைமாடியில் சூரியோதயம் கண்டேன்! அந்த மஞ்சள் வெயில் அவளின் முகம் பட்டு மின்னியது.


எனது கண்கள் மெல்ல மெல்ல மூடியது, காட்சிகள் எல்லாம் மெல்ல இருட்டாகிப்போனது.


காலை 7.30 மணிக்கு சாலை மீண்டும் சுறுசுறுப்பாகியது. நெரிசல் சத்தம் என் அமைதியை கெடுத்தது. 10 மணி லாக்கடவுனுக்குள் காய்கறி வாங்க கூட்டம் கூடியது. வெயிலின் தாக்கம் கண்களை கூசச்செய்தது. கண்களை திருகியவாறு தண்ணீர் தொட்டியின் மீது கொட்டாவிட்டு தூங்கி எழுந்தேன். ஒரு நொடி எழுந்து சுதாரித்துக்கொண்டு நல்ல கனவு என்று எனக்குள் சிரித்துக்கொண்டேன்! கீழே இறங்கி எனது அறையை நோக்கி செல்லும் பொழுது காய்கறி கடையில் ஒரு பெண் என்னை நோக்கி கை அசைத்தாள், மங்கலாய் தெரிந்த கண்களை மீண்டும் திருகினேன் அப்பொழுது எனது கையில் இருந்த கைபேசி அதிர்ந்தது, எடுத்து பேசினேன் "ஹாய் நான் ரம்யா பேசுறேன் நேத்து நைட் மொட்டைமாடியில பேசினோம்ல!" சற்றே தலைசுற்றியது. அவள் அங்கிருந்து வேகமாக கை அசைத்தாள்! என்னை அறியாமல் எனது கை அவளை நோக்கி அசைக்க ஆரம்பித்தது.


தொடரும்...


இந்த பொய்க்கதையை எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.



1 view0 comments
bottom of page