Sivaraj Parameswaran
ஒரு மொட்டை மாடி கதை - அத்தியாயம் 2
Updated: Aug 26, 2022

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கண்ணம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே.....
ரேடியோவில் காதலன் பாட்டு ஒலித்துக்கொண்டிருக்க, சீலிங் பேன் சுற்றும் அழகை முதல் முறையாக ரசித்து பார்த்துக்கொண்டே இருந்தேன். நம் வீட்டு சீலிங் பேன்னிற்கு இவ்வளவு அழகுதன்மையா? இன்றளவு இதை ரசிக்காமல் இருந்துவிட்டோமே. பசி மறந்தது. தாகம் மறந்தது. இசை உணவானது. சீலிங் பேன் அழகானது. சிந்தனையில் நான் அழகானேன். நான் அழகானேன் என்று சிந்தித்தவுடன் சடாலென்று பாட்டு நின்றது! அறை இருட்டானது. மின் வெட்டு ஒரு சகுனக்குறை போல வந்தது. கனவு கலைந்தது.
சோகத்தோடு முகம் கழுவி பல் துலக்கி, அடுக்களையில் என்ன சாப்பிட இருக்கு என்று தேட ஆரம்பித்தேன்! தேடி தேடி ஒரு நூடுல்ஸ் பாக்கெட் கிடைத்தது. சிலிண்டர் தீர்ந்தது என்றறியாமல் அடுப்புடன் சண்டையிட்டு கொண்டுயிருந்தேன். சண்டையில் தோற்ற நான் பசி தாங்க முடியாமல் மறுபடியும் தேட ஆரம்பித்தேன். இம்முறை காலாவதியான பிஸ்கட் பாக்கெட் கிடைத்தது. தண்ணீரும் பிஸ்கட்டும், அதன் ருசியை ஒவ்வொரு பேச்சுலரும் அனுபவித்து இருப்பார்கள்! அதை நானும் ரசித்து ருசித்தேன். பசி தணிந்தது. ரேடியோ மறுபடியும் பாட துவங்கியது இம்முறை,
பூபோல் பூபோல்
என் நெஞ்சை
கொய்தவள்!
மின்னலாய் மின்னலாய்
என் பார்வை
பறித்தவளோ...
என்ற பாட்டு ஒலிக்க, நேற்றைய மொட்டைமாடி நினைவுகள் வந்தது. மின்னல் வெளிச்சத்தில் அவளின் முகம் என் முன்னே மீண்டும் மீண்டும் வந்து சென்றது. அதை யோசித்தவாறே மெத்தையில் சாய்தேன். அறை முழுவதும் இசையால் நிரம்பியது. கண்கள் சொக்கியது. மெல்ல மெல்ல அறை இருட்டானது. இருள் நிரம்பியவுடன்.
தட தட என்று கதவை தட்டும் சத்தம் என் தூக்கத்தை கலைத்தது. சோம்பலுடன் தலையணையை வீசி எறிந்து கதவை திறந்தேன். யாரும் இல்லை! வெளியே வந்து தேடினேன்! சுற்றும் முற்றும் பார்த்தேன்! யாரும் இல்லை! கோபத்தின் உச்ச நிலையை கட்டுப்படுத்திக்கொண்டு அறையை சாத்தி விட்டு மறுபடியும் மெத்தை மீது விழுந்தேன். இம்முறை பெல் டிங் டோங் டிங் டோங் என்று அடிக்கும் சத்தம். மண்டைக்குள் கோபம் கனலாய் எரிய, கதவை திறந்து பார்த்தேன். யாரும் இல்லை! ஏட்டி பார்த்தேன் படிக்கெட்டில் கீழ்வீட்டு பையன் ஓடிக்கொண்டு இருந்தான் கூடவே அவனது சகோதரியும் நண்பர்களும் இருந்தார்கள். என்னை அறியாமல் அவர்களை கண்டு சிரித்து கோபம் சற்று தணிந்து படிக்கெட்டில் உட்கார்ந்துகொண்டேன். பூனையை(முஸ்த்தபா) கூப்பிட்டு மொக்கை போட கைபேசியை எடுத்தேன், என் முதுகை ஒருவர் தட்ட திரும்பி பார்த்தேன். ரம்யா ரம்யமாய் நின்று கொண்டுயிருந்தாள். கைபேசி என்னை அறியாமல் எனது கால்சட்டை பைக்குள் சென்றது. "என்ன ரகு படிக்கெட்டுல உட்கார்ந்து என்ன பண்றீங்க?" பதில் சொல்ல தெரியாமல் "சும்மா பூனைக்கு கால் பண்ணலாம்ன்னு உட்கார்ந்தேன்" அதை கேட்டு அவள் ஆச்சரியத்துடன் "பூனைக்கா?" மழுப்பிக்கொண்டு "என் பிரெண்ட....நான்....முஸ்த்தபா....பூனை" என்று வாய் குழம்பி பேச, அவள் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். "ரிலாக்ஸ் ரகு" என்று கூறி தனது காதோரம் இருந்த அந்த அழகிய சுருண்ட கூந்தலை சரி செய்தாள். என் கண்கள் அவளின் காதோரம் இருந்த கூந்தலின் வளைவை ரசித்தது. பெண்ணின் காதோர கூந்தலுக்கு இவ்வளவு அழகா? என் பார்வை சென்ற திசையை அவள் திரும்பி பார்க்க, யாரும் இல்லாததை கண்டு "என்ன பார்க்குற?" என்று அவள் புருவம் உயர்த்தி என் முகத்தின் அருகே கையசைத்து கேட்ட, நான் கண்களை மூடிக்கொண்டு ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தேன்.
"சாப்பிட்டாச்சா" என்று அவள் கேட்க "மார்னிங் பிஸ்கட் ஓவர், மதியம் பிஸ்கட் தேடணும்!" என்று நான் சொன்னேன். புருவம் உயர்த்தி "ஏன் சமைக்கலியா?" கேஸ் இல்லாத சோகக்கதையை சொல்ல அவள் "லஞ்ச் எங்க வீட்டுலதான், பார்மாலிட்டி பார்க்காதீங்க! தயவு செஞ்சு வந்துருங்க ஓகே!" என்று அவள் கட்டளை இட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் சென்றாள்.
ரேடியோ,
அழகியே ஏ அழகியே ஏ அழகியே………
மேரி மீ மேரி மீ அழகியே………
என்று பாடிக்கொண்டிருந்தது, அவள் சென்ற திசையை நோக்கி நடிகர் கார்த்தி போல் கை நீட்டி வாய் அசைத்து பாடிக்கொண்டிருந்தேன். பின்னாடி அவள் பாட்டி சிவகாமியம்மா என்னை பார்த்து முறைத்துக்கொண்டுயிருந்தாள். வேகமாய் நடையை கட்டி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டேன்.
மெதுவாக கதவை திறந்து பாட்டி போய் விட்டாளா என்று கதவின் இடுக்கில் பார்த்தேன். பாட்டி என்னையே முறைத்து பார்த்துக்கொண்டுடிருந்தாள். பாட்டியின் பார்வை என் உடலை ஊடுருவி சென்றது, பயத்தில் கதவை தாழிட்டேன். ரேடியோவை அணைத்தேன். வேர்த்துக்கொட்டியது. தண்ணீர் குடிக்க பாட்டிலை எடுத்த பொழுது சொட்டுதண்ணீர் இல்லை. தண்ணீர் கேன் இருந்த பக்கம் திரும்பினேன் கேன் காலியாக இருந்தது.
தட தட என்று கதவை தட்டும் சத்தம் கேட்டது. தொண்டைக்குழாய் எச்சிலை விழுங்கியது. நாக்கு வறண்டது. சீலிங் பேன்னின் கரகர சத்தம் காதை துளைத்தது. தட தட சத்தம் மேலும் பலமானது. வேர்வை இன்னும் அதிகமானது. கைகள் நடுங்கிக்கொண்டே கதவின் தாழை திறந்தேன். அங்கே....
தொடரும்...
இந்த பொய்க்கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.