Sivaraj Parameswaran
ஒரு மொட்டை மாடி கதை - அத்தியாயம் 3
Updated: Aug 26, 2022

தட தட சத்தம் மேலும் பலமானது. வேர்வை இன்னும் அதிகமானது. கைகள் நடுங்கிக்கொண்டே கதவின் தாழை திறந்து கதவின் இடுக்கில் பார்க்க அங்கு தண்ணி கேன் கொண்டுவரும் பையன் கேனோடு நின்று கொண்டு "கேன் வேணுமானா?" என்று கேட்க "ரெண்டு கேன் போடுப்பா" என்று கூறி வெளியே வந்து படிகளிலிருந்து கீழே எட்டி பார்த்தேன், பாட்டி இல்லை! நிம்மதி பெருமூச்சு விட்டு மறுபடியும் அறைக்குள் சென்று கதவை சாத்த முற்படும் பொழுது கேன் பையன் கதவை சாத்தவிடாமல் "அண்ணா அண்ணா காலி கேன் ணா!!" "சாரி பா மறந்துட்டேன்!" "அப்படியே ரெண்டு கேன்னுக்கும் காசு கொடுத்துருண்ணா!!" என்று அவன் சொல்ல, காலி கேனை அவனிடம் கொடுத்து மணி பர்ஸை தேடினேன். 60 ரூபாய் அவனுக்கு கொடுத்துவிட்டு மீதி காசை எண்ணினேன். சில்லரையாய் 670 ரூபாய் இருந்தது. கேஸ், EB, வாடகை எப்படி சமாளிப்பேன் என்ற யோசனையில் கடிகாரம் வேகமாக ஓடியது. மணி சரியாக 12.30 ஆனதும் எனது தொலைபேசி அடித்தது, ரம்யா தான். தொலைபேசியை எடுத்து "ஹலோ" என்றேன் மறுமுனையில் "சுட சுட சாப்பாடு ரெடி சார்! எப்போ வருவீங்க? உங்களுக்காகத் தான் வேய்ட்டிங்!" என்று அவள் சொல்ல "5 மினிட்ஸ்.. தோ வந்துடுறேன்!!" தொலைபேசியை கட்டிலின் மீது எறிந்து ரேடியோவை ஆன் செய்து குளியலறையில் குளிக்க ஓடினேன்.
"முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி..."
பாட்டு கேட்டுக்கொண்டே குளித்தேன். வெளியே வந்து டூப்ளிகேட் டாமி டீ ஷர்ட்டை தேடினேன். துணி குவியல் மலையில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வெள்ளை டீ ஷர்ட்டை இஸ்திரி போட்டு அந்த கிழிஞ்ச ஜீன்ஸை அணிந்துக்கொண்டு கையால் தலைவாரி அந்த கிழிந்து போன பட்டை செருப்பை மாட்டிக்கொண்டு படி இறங்கினேன்.
தெருவில் போலீஸ் வண்டியில் சப் இன்ஸ்பெக்டர் "மாஸ்க் ஒழுங்கா போட்டு போங்க சார்" என்று பைக்கில் போகின்ற ஒருவரை பார்த்து மைக்கில் சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தார். மாஸ்க்கை மறந்தது ஞாபகம் வந்தது. திரும்ப மாடிக்கு ஓடினேன். அந்த கசங்கி போன செகப்பு மாஸ்க் துணியை தேடினேன். கட்டிலின் கீழ் ஒளிந்திருந்தது, அதை எடுத்து தூசி தட்டினேன்! திருப்தி வரவில்லை! இஸ்திரி போட்டு அதை சரி செய்தேன். ஆக்ஸ் ஸ்பிரே அடித்தேன் நறுமணம் குபீர் என்றது. அப்படியே அக்குளிலும் அடித்துக்கொண்டேன். மறுபடியும் கையால் முடியை சரி செய்துகொண்டு மாஸ்க்கை போட்டுக்கொண்டு கீழே சென்றேன்.
சிவகாமி பாட்டியின் வீடு எது? அதை யாரிடம் கேட்பது என்று திரு திரு வென்று முழித்தவாறு இரெண்டாவது மாடியின் படியின் ஓரமாக நின்றிருந்தேன். நடுத்தர வயதுடைய இரண்டு ஜான் தொப்பை வைத்த ஒருவர் கஷ்டப்பட்டு படி ஏறி வந்துக்கொண்டிருந்தார். மேலே ஏறி மாஸ்க்கை இறக்கி மூச்சுவாங்கினார். அவரிடம் "சார்... இங்க சிவகாமி பாட்டி வீடு எது சார்?" என்று கேட்க, அவர் ஆச்சரியமாக என்னை மேலும் கீழும் பார்த்து "இங்க புதுசா?" "ஆமாம் சார் லாக்டவுன் முன்னாடி தான் ஷிபிட் ஆனேன்" "அது தான் உன்ன எனக்கு தெரியல! இந்தா இதுலே கடைசியா இருக்கு பாரு அந்த பிளாட் தான், நம்பர் 2B" "ஓ... ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று கூறி நான் பிளாட் நோக்கி நடந்தேன்.
பிளாட் 2B என்று கதவின் மேல் எழுதி இருந்தது, பெல் அடிக்க ரம்யா கதவை திறந்தாள். ரம்யா சிரித்துக்கொண்டே "இது தான் உங்க 5 மினிட்ஸ்ஸா?" என்று கேட்க "சாரி குளிச்சிட்டு வர... கொஞ்சம்... லேட் ஆகிடுச்சு!!" என்று இளித்தவாறு சொன்னேன். "ஹ்ம்ம்" என்று அவள் உதட்டை முறுக்கி சிரிக்க, "என்னை இப்படியே வச்சு பேசி அனுப்பிருவிங்களா? இல்லே சாப்பாடு எதாவது தருவீங்களா?" என்று நான் நக்கலாக கேட்க "ஐயோ அம் சோ சாரிங்க, ப்ளீஸ் கம் இன்" அவள் உள்ளே அழைக்க நான் உள்ளே சென்றேன். சோபாவை அவள் கை காட்டி உட்கார சொல்ல நானும் உட்கார்ந்தேன். "பாட்டி! பாட்டி! எங்க இருக்கீங்க?" என்று அவள் அங்கிருந்து உள்நோக்கி கத்த, நான் கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன். "2 மினிட்ஸ் பாட்டிய கூப்பிட்டு வந்துறேன், ப்ளீஸ் மேக் யூர்செல்ப் கம்போர்ட்டபுல்" என்று கூறி கதவை சாத்தி தாளிட்டு உள்ளே சென்றாள். கதவு சாத்தும் சத்தம் டங் என்றது.
நடுத்தர வயதுக்காரர் அவரது மனைவிடம் "அந்த சிவகாமி பாட்டியும் அவங்க பேத்தியும் இறந்து ஒரு வருஷம் ஆயிடுச்சா?" என்று கேட்க, அவரது மனைவி "ஆமாங்க போன கொரோனாவுல இறந்தாங்க! இப்போ ரெண்டாவது அலையே வந்திடுச்சு, ஒரு வருஷம் மேலே ஆகி இருக்கும்" என்று அவள் அவருக்கு சாதம் பரிமாறி கொண்டே "ஏன் இப்ப அத கேக்குறீங்க?" என்று கேட்க "ஒன்னும் இல்ல நம்ம பிளாட்ல புதுசா குடிவந்த பையன் அந்த அம்மா பிளாட் பத்தி விசாரிச்சான்!! எதுக்கு விசாரிச்சான்னு தெரியல! மூச்சு வாங்கி படி ஏறுன்னா டென்ஷன்ல அத கேக்காம விட்டுட்டேன்!"
பாட்டி டொக்.... டொக்.... என்று கை தடியை தட்டி கொண்டு வர, பாட்டியை கண்ட பதற்றத்தில் என்னை அறியாமல் நான் எழுந்து நின்றேன். ரம்யா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள். பாட்டியோ என்னை கண்டு முறைத்துக்கொண்டே வந்தாள்...
தொடரும்...
இந்த பொய்க்கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.