top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

ஒரு மொட்டை மாடி கதை - கடைசி அத்தியாயம்

Updated: Aug 26, 2022



பாட்டி டொக்.... டொக்.... என்று கை தடியை தட்டி கொண்டு வர, பாட்டியை கண்ட பதற்றத்தில் என்னை அறியாமல் நான் எழுந்து நின்றேன். ரம்யா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள். பாட்டியோ என்னை கண்டு முறைத்துக்கொண்டே வந்தாள். ரம்யா "பாட்டி நான் சொன்னேன்ல மேல் வீட்டுல ஒரு பையன் தங்கி இருக்கான்னு அது இவருதான்" என்று அவள் என்னை கை காட்டி கூற "பையனா!! நமக்கு 34 வயசுன்னு அவளுக்கு தெரியாது போல" என்று மனதில் நினைத்துக்கொண்டு வழிந்து சிரித்தேன்.


பாட்டி என் எதிரே உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டார். ரம்யா என் அருகே உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். முதல் முறை பாட்டி என்னை பார்த்து சிரித்து ரம்யாவை பார்த்து "நல்லாயிருக்கு" என்று சொல்ல நான் திருத்திரு என்று முழித்தேன். சிரித்துக் கொண்டே ரம்யாவிடம் "என்ன நல்ல இருக்குன்னு சொல்றாங்க?" ரம்யா சத்தமாக சிரித்துக்கொண்டு "உங்கள தான் நல்ல இருக்குன்னு சொல்லுறாங்க!!" என்று கூறி அவள் மீண்டும் சிரிக்க பாட்டியும் கூட சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள் "இது அவ்வளவு காமெடி ஒன்னும் இல்லையே" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஈ என்று இளித்தேன். "சரி சரி நாங்க மொக்க போடல வாங்க சாப்பிடலாம்" என்று எனது உள்விளிக்கு ரம்யா பதில் தர நான் சந்தோசமாக தலையாட்டினேன்.


காதலை விட காமத்தை விட மானத்தை விட பசி என்னை வழி நடத்தியது. வேகமாக எழுந்து "வாஷ் பேசின்?" எங்கே என்று ரம்யாவிடம் கேட்டேன் "லாஸ்ட் ரைட்ல பாத்ரூம் இருக்கு" என்று அவள் கை காட்டி சொல்ல நேர சென்று வாஷ் பேசினில் கை கழுவ குழாயை திறந்தேன்! தண்ணீர் வராமல் காத்து மட்டும் வந்தது. பாத்ரூம் பால மாதங்களாக உபயோகம் செய்யாமல் இருந்தது போல் இருந்தது. இரண்டு முறை குழாயை தட்டி பார்த்தேன். ரம்யா கதவருகே நின்று "என்ன ரகு தண்ணி வரலியா? பக்கெட்ல தண்ணி கொண்டுவரவா?" என்று கேட்க, குழாயில் குபீர் என்று தண்ணீர் பீய்ச்சியடித்தது. தண்ணீர் எனது வெள்ளை டீ ஷர்ட்டை நனைத்து ஈரமாக்கியது. எனது மார்பும் வயிறும் அந்த ஈர துணியில் கண்ணாடி போல் வெளியே தெரிந்தது. கோபத்தில் குழாயிடம் கடித்துக்கொண்டேன். ரம்யா "என்ன ஆச்சு ரகு ஆர் யு ஆல்ரைட்?" என்று கேட்க "ஒன்னும் இல்ல தண்ணி மேலே தெளிச்சுடுச்சு! ஒரு டவெல் கிடைக்குமா?" என்று நான் கேட்பது தான் தாமதம்! கதவை திறந்த பொழுது ரம்யா கையில் டவலோடு நின்றிருந்தாள். டவெல்லை வாங்கி என்னை துடைக்க ரம்யா என்னை கண்கள் விரிய வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் அந்த பார்வையை நான் ரசித்தேன், யார் தான் ஒரு பெண் தன்னை வெறித்துப் பார்த்ப்பதை ரசிக்காமல் இருப்பார்கள்.


பாட்டி தனது கை தடியால் தரையை இருமுறை டொக் டொக் என்று தட்ட, நாங்கள் நிதானத்திற்கு வந்தோம். என்னை ஈரத்துணியில் பார்த்து பாட்டியும் பல் இளித்து ஏதோ தின்பண்டத்தை பார்த்த குழந்தை போல் தனது நாவால் உதட்டை ஈரமாக்கினாள். இது என்னை கொஞ்சம் நெருட செய்தது "ரம்யா ஓகே! பாட்டி எதுக்கு நம்மள வெறிச்சு பாக்குறா? அந்த அளவுக்கு பிட்டாவா இருக்கோம்" என்று மனதில் நினைத்துக்கொண்டு நன்றாக வளந்திருந்த தொப்பையை பார்த்தேன் .


நான் டைனிங் டேபிளில் உட்கார ஆள் உயர ஒரு வாழை இலை அங்கிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட பதார்த்தங்களை ரம்யா விளம்பினாள். நண்டு பொரியல், மீன் வறுவல், கோழி கறிக்குழம்பு, மட்டன் சுக்கா, இரா வருத்தது, ரத்த பொரியல், சுறா புட்டு, காடை, பிரியாணி, புலாவ், குலாப் ஜாமுன், கேசரி, லட்டு, பூரி, சப்பாத்தி, ஊர்க்கா, ரசம், அப்பளம் இப்படி நீண்டு கொண்டேயிருக்க நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடினேன். வருடங்கள் கழித்து இந்த மாதிரி ஒரு சாப்பாட்டை பார்க்கின்றேன். கண்கள் விரிந்தது எங்கிருந்து தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது சாப்பாடு எனக்கு மட்டும் பரிமாற பட "நீங்க சாப்பிடுல" என்று அவர்களை கேட்க "நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம்! நான் உங்கள சாப்பிடுவேன்" என்று ரம்யா என் காதோரம் முணுமுணுக்க என்னுள்ளம் பூரிப்பில் மனம் மகிழ்ந்தது. இரண்டு வாய் சுறா புட்டை ருசித்து பிறகு "தம்பிக்கு அந்த சுறா புட்டை இன்னும் கொஞ்சம் வை மா!" என்று பாட்டி ரம்யாவை பார்த்து சொல்ல கதவை டோங் டோங் என்று தட்டும் சத்தம் கேட்டது. கதவு தட்டும் சத்தம் கேட்டதும் ரம்யா முகம் வாடியது. பாட்டி வெளு வெளுத்து போனாள். நான் கறிக்குழம்பை பிசைந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன், இம்முறை டோங் என்ற சத்தத்தோடு கதவு திறந்தது. நான் யார் என்று திரும்பிப் பார்த்தேன்! அங்கே அந்த நடுதர வயதுக்காரரும் அவரது மனைவியும் கூட ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த ஒருவரும் அங்கு நின்றிருந்தனர்.


நான் ரம்யாவை திரும்பி பார்க்க, அவள் அங்கில்லை! பாட்டியும் அங்கில்லை! டேபிளை பார்த்த பொழுது இலையும் அங்கில்லை. திடீரன்று ஒரு பயம் ஆட்கொண்டது. "யாரு தம்பி நீங்க? பூட்டுன வீட்டுக்குள்ள என்ன பண்றீங்க?" என்று அந்த நடுத்தர வயதுக்காரர் கேட்க "பூட்டுன வீடா?" என்று யோசித்து கையை பார்த்தேன் அழுக்காக இருந்தது. வெள்ளை டீ ஷர்ட் அழுக்காக இருந்தது. கையை முகர்ந்து பார்த்தேன் பிரியாணி வாடை வந்தது. கண்களை திருகி மீண்டும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தேன். ரம்யா இவர்களின் பின்னே கதவருகே பாட்டியுடன் நின்றிருந்தாள். என்னை பார்த்து "Bye...See you later..." என்று கை அசைத்து பாட்டியுடன் மறைந்தாள். நான் இதை கண்டு மயங்கி விழுந்தேன்.


கண் விழித்து பார்த்த பொழுது நான் ஒரு ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். என்னை சுற்றி யார் யாரோ நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் "இவன் என் பையன் தான்! டைரக்டர் ஆகணும் சினிமா படம் எடுக்கணும்ன்னு ரொம்ப ட்ரை பண்ணான்! அவனுக்கு வாய்ப்பு கிடைக்கல! இப்போ கொஞ்ச நாளா இப்படி தான் ஏதாவது பண்றான். பயமா இருக்கு டாக்டர்" என்று அவர் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சுற்றும் முற்றும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று பார்த்தேன். டாக்டரை அழைத்து "அவரு யார பத்தி பேசிட்டு இருக்காரு?" என்று நான் கேட்க. டாக்டர் என்னை படுக்க வைத்து ஒரு இன்ஜெக்ஷன் போட்டார். கண்கள் சொருக நிம்மதியாக ஒரு தூக்கம் வந்தது.


விடியற்காலை 3 மணி, கனவு என் தூக்கத்தை கலைத்தது. தாகம் கொண்டு நாவு தளதளர்த்தது, அரை பாட்டில் தண்ணீர் தொண்டையை குளிரச்செய்தது. தூக்கம் கலைந்ததால் கொஞ்சம் காற்று வாங்க எனது அறையின் கதவை திறந்து எதிரே உள்ள ஆள் இல்லா மொட்டை மாடிக்குச் சென்றேன்... மீண்டும் முதல் அத்தியாயம் படிக்கவும்....


முற்றும்.



இதை ஒரு குறும்படமாக எடுக்க எண்ணினேன். அதற்கு முக்கியமாக பணமும் பின் சமயமும் சந்தர்ப்பமும் அமையவில்லை. அதை உங்களுக்கு ஒரு குறுந்தொடராக சமர்ப்பிக்கிறேன். இக்கதையை படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இந்த பொய்க்கதையை எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.

0 views0 comments
bottom of page