Sivaraj Parameswaran
காதல் - அத்தியாயம் 1
Updated: Aug 26, 2022

ஒருவன் எத்துணை முறைதான் காதலில் விழுவான்?
டிசம்பர் 26 1986,
நான் இந்த பூவுலகில் பிறந்த தினம். எப்படியாவது இந்த உலகை விட்டு தப்பி விடலாம் என்று ஓவென்று அழுது பார்த்தேன். முடியவில்லை இந்த உலகில் மனிதனாக வசமாக மாட்டிக்கொண்டேன். என்னை என் பெற்றோர்கள் எந்தக்குறையும் இன்றி அன்போடும் அரவணைப்போடும் நன்றாகத்தான் வளர்த்தார்கள். ஆனால் ஏனோ! எனக்குள் எப்பொழுதும் ஒரு வெறுமையும் தனிமையும் ஆட்கொண்டிருந்தது. சுற்றும் நண்பர்களும் அன்பர்களும் இருந்தாலும் ஒரு தனிமையை உணர்ந்தேன். காலம் உருண்டோடியது. நானும் உருண்டோடினேன்.
ஜூலை 17 1995,
நான் முதன் முதலாக டேஸியை சந்தித்த நாள், இன்றளவும் மறவாமல் என் ஆன்மாவில் பச்சை குத்தப்பட்ட நினைவுகளில் ஒன்று! என் ஆழ்நினைவுகளை மறக்க பலமுறை கடவுளிடம் யாசித்தேன். ஏன் சாத்தானிடம் கூட என் ஆன்மாவை தருகின்றேன் என் நினைவுகளை அழித்துவிடு என்று யாசித்தேன். எந்த பலனும் இல்லை என்ன பாவமோ என் நினைவுகள் சாபமாய் என்னை துன்புறுத்தியது. அந்த நினைவுகளில் டேஸியும் ஒன்று. டேஸி என்று அவள் பெயரை உச்சரிக்கும் பொழுது, அவள் நினைவுகள் கலர் சினிமா போல் என் கண் முன்னே வந்து செல்லும்.
அவளை முதன் முதலாக பார்த்தபொழுது அவளுக்கு 14 வயது எனக்கோ 13 வயது. அவள் பேரழகி, அவள்தான் எங்கள் வகுப்பின் ஒரே ஒரு மாணவி. தேனீக்களைப் போல், 56 ஆண்களிடேயே ஒரே ஒரு பெண் ராணி. அவளுக்கு எங்கள் வகுப்பையும் பிடிக்கவில்லை எங்களையும் பிடிக்கவில்லை என்பது மிகத்தெளிவாகு தெரிந்தது. இதை அறிந்து டீச்சர் எங்களிடமிருந்து அவளை பாதுகாக்க அவளை ஆஸ்தானமான முதல் பெஞ்சில் உட்காரவைத்தார். தனிமையில் உட்கார யாருக்குத்தான் பிடிக்கும். கூட படிக்கும் சக நண்பர்களும் அந்த பிஞ்சு வயதிலும் ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு, அவளின் பின் பெஞ்சில் உட்கார அடித்துக்கொண்டனர். வேடிக்கை ஆனால் இது நிதர்சன உண்மை.
நானோ கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருந்தேன். அவளை நேரே காண தைரியம் இல்லாமல், என் முன் உட்கார்ந்து இருக்கும் நண்பனின் முதுகில் என்னை மறைத்துக்கொண்டு, அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவளின் தனிமை நிலை கண்டு வருத்தப்பட்டேன். நான் ஓரக்கண்ணால் பார்ப்பதை கண்ட என் கிராதக நண்பனான எதிரி விக்கி, என் அருகில் உட்கார்ந்துக்கொண்டு டேஸியை பார்த்து "டேஸி சுப்ரமணி உன்கிட்ட பேசணுமாம்" என்று உரக்க கத்தி டேபிளின் அடியில் குனிந்து ஒளிந்துக் கொண்டான். இதை கேட்ட நான் வெளுவெளுத்து போனேன். மொத்த வகுப்பும் என்னை திரும்பிப்பார்த்து. கூடவே டேஸியும் என்னை திரும்பி பார்த்தாள். அவளுக்கு நான் ஒருவன் இங்கு இருக்கின்றேன் என்று தெரிவதும் அன்றுதான். அவள் என்னை பார்க்கின்றாள் என்று தெரிந்த நான் செய்வதறியாது தலை சுற்றுவது போல் நடித்து கீழே விழுந்தேன். மொத்த வகுப்பும் என் கோமாளி கோழைத்தனத்தை பார்த்து சிரித்தது.
கிரௌண்டில் விக்கியை கல்லை கொண்டு அடிக்க துரத்தினேன். அவன் சிரித்துக்கொண்டே "நீ தாண்ட அவளை விட்ட கண் பார்க்காம பார்த்து இருந்தே, அதுனாலதான் ஹெல்ப் பண்ணேன்" என்று கத்திக்கொண்டே, என் கற்களிடமிருந்து தப்பித்து வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான். அவனை பிடிக்கமுடியாமல் ஓடி ஓடி மூச்சு முட்டிய நான் ஆலமரத்தின் கீழே உட்கார்ந்து, இந்த அசிங்கத்தை எப்படி சரி செய்வது என்று யோசிக்கலானேன்.
விக்கி, அன்றும் இன்றும் என்னயுடைய நெருங்கிய நண்பனாவான். பயங்கர புத்திசாலி ஆனால் அந்த புத்தியெல்லாம் நல்லதுக்கு பயன்படாது. படிப்பாளி படைப்பாளியும் கூட. வாய்திறந்தால் பொய் மூட்டைகள் அவிழும். இருந்தாலும் எங்களின் கூட்டத்தலைவனாவான். பிஞ்சிலே பழுத்த பழம். சொல்லப்போனால் எங்கள் அனைவரின் குருநாதனும் இவன் தான். இவன் செய்த அசிங்கத்தை எப்படி கலைவேன் என்ற யோசனை என்னை விட்டு அகலவே இல்லை.
மறுநாள் அதே போல் முன்னால் அமர்ந்து இருந்தவனின் முதுகிற்கு பின்னால் ஒளிந்துக்கொண்டு டேஸியை பார்க்க, அவளோ நேருக்கு நேர் என்னை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள். பயத்தில் முதுகிற்கு பின்னால் திரும்பவும் ஒளிந்து கொண்டேன். இதை கண்டு விக்கி என்னை பார்த்து சிரிக்க. ஓங்கி ஒரு கொட்டு அவன் தலையில் வைத்தேன். ஸ்கூல் பெல் கணீர் என்று அடித்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வகுப்பை விட்டு டேசியின் கண்ணில் படாமல் ஓடினேன். விக்கி என்னை பின்னாலிருந்து கூப்பிட, நிற்காமல் திரும்பிப் பார்க்காமல் வீடுவரை ஓடினேன்.
வெள்ளி சனி விடுமுறை முடிந்து, திங்களன்று பள்ளிக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே சென்றுவிட்டேன். யாருமே இல்லாத வகுப்பறையில் துள்ளிக்குதித்து சினிமா பாட்டு பாடி தனியே டான்ஸ் ஆடி கருப்பு போர்டுடை பஞ்சு துணியால் துடைப்பதின் சுகமே தனிதான். போர்டுடை துடைத்து, தேதிகளை மாற்றி எழுதி வேறு என்ன செய்வதென்று அறியாமல் இருந்த பொழுது, சாக் பீஸ் கொண்டு போர்டில் பெயர்கள் எழுதினேன் கூடவே அவள் பெயரையும் எழுதினேன்! அவள் பெயர் எழுதியவுடன் ஒரு நடுக்கம், கையில் டஸ்டரை ரெடியாக வைத்திருந்தேன் யாராவது வந்தால் உடனே அழித்துவிட! அவள் பெயருக்கு அருகில் பூ ஒன்றை வரைந்தேன் அவள் பெயரை அழகாக்கினேன். பிறகு அவளின் பெயர் மீது கைவைத்து "உனக்கு ஏன் இவ்வளவு எகத்தாளம், அது தான் தெரியுதுல நான் கோழைன்னு நீயா வந்து பேசுனா குறைஞ்சா போய்டுவே? உன்ன விட நான் ஒரு வயசு சின்ன பையன் தானே! நீயா பேசினாத்தான் என்ன?" இப்படி பேசிக்கொண்டே ஸ்டைலாக, சாக் பீஸ்ஸை குப்பை தொட்டியில் தூக்கி எறிந்தேன். அது குப்பைத்தொட்டியில் சரியாக விழு துள்ளி குதித்தேன். துள்ளி குதித்து திரும்பியபோது டேஸி என்னை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள். என்ன செய்வதென்று அறியாமல் உறைந்து போனேன். நொடிப்பொழுதில் ஞானம் வந்து அவளது பெயரை எனது முதுகால் மறைத்து எனது முதுகை வைத்து தேய்த்து, அவளின் பெயரை அழித்தேன். அவள் தனது பையை பெஞ்சில் வைக்க திரும்பியவுடன் நொடிப்பொழுதில் போர்டுடை மொத்தமாக அழித்து, எனது பெஞ்சிற்கு வந்து உட்கார்ந்தும் கொண்டேன். அவள் அழிக்கபட்ட போர்டுடை பார்த்து என்னை திரும்பி பார்த்தாள். நான் கண்டும் காணாமல் இருந்தேன்.
அவள் என்னுடைய பெஞ்சிற்கு அருகே வந்து, பெஞ்சின் மீது டொக் டொக் என்று தட்டினாள். நான் என்ன என்பது போல் பார்த்தேன். "எதுக்கு என் பெயரே போர்டுல எழுதின?" அப்பாவியாக நான் "ஏது நானா, உன் பெயரையா? எதுக்கு?" அவள் இடுப்பில் கைவைத்து முறைத்துக்கொண்டு "அப்போ அங்கே என்ன பண்ணிட்டிருந்த?" அதே அப்பாவித்தனத்துடன் "போர்டுட துடைச்சிட்டு இருந்தேன்" முறைப்பு சற்றும் குறையாமல் பதில் ஏதும் சொல்லாமல் திரும்ப அவள் இடத்திற்கு போய் உட்கார்ந்தாள். நான் அவமானம் கொண்டு பெஞ்சின் மீது தலை சாய்த்துக்கொண்டு படுத்தேன்.
படுத்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவள் என்ன செய்கின்றாள் என பார்த்தேன், அவள் அங்கில்லாததை பார்த்து திடுக்கிட்டு எழுந்தேன். எட்டி எட்டி பார்த்தேன். உள்ளுணர்வு அவள் பின்னாள் நிற்கின்றாள் என்று உணர்த்தியது. மெல்ல திரும்பினேன். அவள் ரெண்டு கையையும் இடுப்பில் வைத்தவாறு என்னை நோக்கி நின்று இருந்தாள். நான் வழிந்த சிரிப்புடன் நழுவ பார்த்தேன். என் சட்டை காலரை பிடித்து "என் பெயரு டேஸி, நான் தோ அந்த முதல் பெஞ்சில உட்கார்ந்திருக்கேன். நல்ல பேசுவேன்! நல்ல பாடுவேன்! நீங்க என் கூட பிரெண்ட்ஸா இருப்பீங்கள?" குழந்தை வயதில் அவள் இவ்வளவு பேசியது என்னை வாயடைக்க செய்தது. கால் தடுக்கி கீழே விழுந்தேன். கைகொடுத்து என்னை தூக்கி விட்டாள். "தேங்க்ஸ்" என்று சொன்னேன். சிரித்துக்கொண்டே "பிரெண்ட்ஸ்க்குள்ள தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு சுப்பு" என்று அவள் செல்லமாக சொல்ல, அது வரை மணி என்று செல்லமாக அழைக்கபட்ட நான் சுப்புவாக மாறினேன்.
"பிரெண்ட்ஸ்" என்று அவள் கை நீட்ட சிரித்துக்கொண்டே கை குலுக்கினேன். அது வரை இல்லாத ஒரு புது உணர்வு என்னை வெட்கபடச்செய்தது. நெளிந்து சிரித்தேன்.
நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம். அவள் தந்தை ஒரு நேவி ஆபிஸர் தாய் ஒரு குடும்பப்பெண். இளையவனை அவள் கழுதை என்றும் செல்ல நாய் குட்டியை கிவி என்றும் பெயர் கொண்டு அழைப்பாள். காலம் மறக்க அவள் பேசிக்கொண்டிருப்பாள் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். பதில் பேசாமல் கேட்பதும் இனிமையே!
இனிமையிலும் இனிமை அவள் சிரிக்கும் பொழுது அவள் கன்னத்தில் குழி விழுவது. அதுவும் ஒரு கன்னத்தில் அல்ல, இரு கன்னத்தில்! அவள் சிரிக்கும் பொழுது நான் கண் எடுக்காமல் ரசிப்பது அவள் கன்னங்குழிகளைத்தான். ஒரு முறை நான் கேட்டே விட்டேன் "உனக்கு எப்படி இரண்டு கன்னங்குழி ?" என்று. அதற்க்கு அவள், "ஒரு குழி என் அம்மா கிட்டேயிருந்தும் இன்னொரு குழி என் அப்பா கிட்டேயிருந்தும்" கிடைச்சதுன்னு வெகுளியா சொன்னா. அவளின் அந்த வெகுளித்தனத்திலும் ஒரு உண்மை இருந்தது. அவள் அம்மாவுக்கு வலது கன்னத்திலும் அப்பாவிற்கு இடது கன்னத்திலும் கன்னங்குழி இருந்தது. அழகை அவள் அம்மாவிடமிருந்து பெற்றாள். அறிவை அப்பாவிடமிருந்து. இளையவன் எங்கிருந்து வந்தான்? ஆஸ்பத்திரியில் எங்கேனும் மாரி கொண்டுவந்தார்களோ என்னவோ? அவளுக்கும் அவனுக்கும் எங்கே சம்பந்தம் என்று ஏணி வைத்து தேட வேண்டும். இவளின் இளையவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனை சகித்துக்கொண்டேன். இல்லாவிடில் என்றோ அவனை கடலில் தள்ளியிருப்பேன்.
டேஸி வந்த பிறகு வாழ்க்கை டேஸி மயமாக மாறியது. என்றும் டேஸி எதிலும் டேஸி என்று ஆனது. ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு போகலானேன். ஒரு முறைகூட நான் அவளை காணாத நாள் இருந்ததில்லை. தேவாலயத்தின் காரோல் கூட்டத்தில் ஒரு அங்கமானேன். ஹிந்துவாக இருப்பினும் என் தந்தை என்னை ஒரு போதும் இதை ஒரு குறையாக கண்டதில்லை, அவருக்கு எம்மதமும் சம்மதமே.
என்னை அறியாமல் நான் எனது நண்பர்களிடமிருந்து விலகிக்கொண்டிருந்தேன். எந்நேரமும் டேஸி டேஸி என்று சுற்றிய படியால் கிரிக்கெட் டீமிலிருந்து விலக்கப்பட்டேன் மாறாக காரோல் டீமில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். விக்கி என்னை திட்டி தீர்த்தான். நான் அவனைக்கண்டுகொள்ளாமல் டேஸியுடன் சுற்றி தெரிந்தேன். சந்தோஷம் மட்டுமே இருந்த எனது வாழ்க்கையில் புயலும் வீச ஆரம்பித்தது.
புயல் வீசிய நாள் மே 15 1996,
அன்று மாலை என்னை காண டேஸி வீட்டிற்கு வந்தாள். மொட்டை மாடியிற்கு சென்றோம். நான் பேசாமல் திண்ணை மேல் உட்கார்ந்து இருந்தேன். அவளும் பேசாமல் என்னருகில் வந்து உட்கார்ந்தாள். நேரம் வேகமாய் சென்றுகொண்டிருந்தது. அவள் மெல்ல திரும்பி "நாங்க விசாகபட்டணத்திற்கு மாறிப்போறோம் டா" என்று குரல் தழுக்க சொன்னாள். மௌனம் கலைத்து "திரும்ப எப்போ வருவே?" என்று கேட்க அவள் உதடு நெளிந்து கண்ணீர் மல்க என்னை கட்டியணைத்து "இனி நாங்க திரும்ப வரமாட்டோம்ன்னு அம்மா சொன்னாங்க, இங்க எங்களுக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லயாம்!" என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள். "அப்போ நாங்கெல்லாம் சொந்தம் இல்லையா?" என்று கேட்க தோன்றியது ஆனால் கேட்கவில்லை.
அவளை சமாதானம் செய்தேன். அவள் என்னை பார்த்து "நான் ஊருக்கு போறேன்னு உனக்கு அழுகை வரல?" என்று கோபமாக கேட்க. நான் சிரித்துக்கொண்டே "நீ என்ன அமெரிக்காவா போற? ஆந்திரா தானே, போயிட்டு அட்ரஸ் அனுப்பு. நான் அப்பா அம்மாவோட வரேன்" என்று ஆறுதல் சொன்னேன். "கண்டிப்பா வருவியா?" "கண்டிப்பா வருவேன்" "ப்ராமிஸ்" என்று கூறி கை நீட்ட "ப்ராமிஸ் " என்று கூறி அவள் கை மீது கை வைத்து சத்தியம் செய்தேன். அவள் சிரித்துக்கொண்டே 5 ஸ்டார் சாக்லெட்டை என்னிடம் தந்தாள். அந்த சாக்லேட் பேப்பர் இன்றும் எனது டைரியின் இடுக்கில் சுளியாமல் பத்திரமாக இருக்கின்றது.
சோகமாக என்னை திரும்பி திரும்பி பார்த்தவாறு அவள் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள், இன்றளவும் என்னுள் அந்த காட்சி தெளிவாய் தெரிகின்றது. அவள் வெள்ளை மேல் உடுப்பும் சிகப்பு கிழ் பாவாடையும் அணிந்து ஒரு குட்டி தேவதை போல் காட்சி அளித்தாள். அறியா வயதில் இப்படி ஒரு உணர்வை தந்த இறைவனை கோபமாக ஏசினேன். நான் ஏசியதை இறைவன் கேட்டுவிட்டான் போலும். வானம் பிளந்து இடி முழங்கியது. மழை ஜோவென்று பெய்ய ஆரம்பித்தது. நான் மழையில் நனைய ஆர்மபித்தேன். கண்ணீர் மழையோடு கலந்தது. என்னுள் புயல் உருவானது.
அம்மா உள்ளிருந்து துண்டோடு ஓடி வந்தாள், என்னை அதட்டி "இதுக்கெல்லாம் போய் அழலாமா, இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கு இதுக்கு போய் அழுறே!" என்று கூறியவாறு தலை துவட்டினாள். அம்மாவிற்கு மட்டும் தெரிந்த என் கண்ணீர் ஏனோ கடவுளுக்கு தெரியவில்லை.
இன்று வரும் நாளை வரும் என்று என்றும் வராத டேஸியின் கடிதத்திற்காக பல காலம் காத்திருந்தேன். காத்திருந்து காத்திருந்து காலம் மறந்த காலத்தில் என் காத்திருப்பை மறக்கச் செய்ய அவள் வந்தாள்...
தொடரும்...
இப்படிக்கு,
சுப்பு (எ) சுப்பிரமணி
இந்த பொய் கதையை எழுதுவது,
ஷிவ் (எ) சிவராஜ் பரமேஸ்வரன்.