Sivaraj Parameswaran
காதல் - அத்தியாயம் 2
Updated: Aug 26, 2022

நினனைவுகளில் டேஸி மங்கலாகிக் கொண்டிருந்தாள்.
அவள் சென்ற 3 வருடங்களில் நான் ஒரு முறைகூட தேவாலயத்திற்கு செல்லவில்லை. காரோலில் இருந்தும் என்னை நான் விடுவித்துக் கொண்டேன். அவளின் நினைவை நினைவூட்டும் எல்லாவற்றை விட்டு தூர விலகிக்கொண்டேன். கிரிக்கெட்டின் மீது கவனம் செலுத்தினேன். சோனல் வரை சென்று விளையாடினேன். நண்பர்கள் எனது புது உலகமாக மாறினார்கள். அதில் விக்கி நெருங்கிய நண்பனானான். எல்லாம் நல்ல படியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஜூலை 16 1999 வரையில்.
ஜூலை 17 1999, புனித பீட்டர் தேவாலயம்,
பலவருடம் கழித்து தேவாலயத்தின் ஞாயிறு பூசைக்கு விக்கி வருமாறு அழைத்தான் மறுப்பேதும் சொல்லாமல் சென்றேன். ஒரு விதமான புதுமையான உணர்வு என்னை ஆட்கொண்டது. டேஸி இங்கு தான் எங்கோ இருக்கின்றாள் என்ற எண்ணம் என் கண்களை தேடவைத்தது. தேவாலயம் எங்கும் அவளது நினைவுகள் நிரம்பியிருந்தது. இந்த ஆட்கூட்டத்திலும் என்னை என் தனிமையை ஆட்கொண்டது. விக்கி வழக்கம் போல நேரம் தவறினான். நான் தேவனாகிய தேவனை பார்த்து என் கண்களை மூடி தியானிக்க தொண்டங்கினேன்.
சில நிமிடங்களில் பாதர் வந்து பூசையை ஆரம்பித்தார். விக்கியும், கூட லாவண்யாவும் வந்தாள். விக்கி எனதருகில் அமர, வீக்கியை பார்த்து சிரித்தவாறு முன்வரிசையில் லாவண்யா சென்று அமர்ந்தாள். "பரவாயில்லியே வந்துட்டே!" என்று நான் அவனை சீண்ட "என்ன பண்றது அவங்கப்பாவுக்கு நைட் ஷிபிட் மாறி டே ஷிபிட் ஆகிடுச்சு" என்று அவன் சோகமாக சொல்ல நான் சிரிக்க ஆரம்பித்தேன். அவனும் கூட சேர்ந்தது சிரிக்க, முன்வரிசையில் நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கட்டுமஸ்தான் உடம்புக்காரன் எங்களை திரும்பிப்பார்த்து ஒரு முறை-முறைத்ததான். அவனைக்கண்ட மாத்திரத்தில் எங்கள் சிரிப்பு அடங்கிப்போனது.
"படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே..."
என்று காரோல் குழு பாட தேவாலயம் அமைதியானது. எல்லோரும் அந்த பாடலில் லயித்திருக்க, ஒரு பெண் தேவாலத்திற்குள் ஓடிவந்தாள். டொக் டொக் என்ற அவளது காலடி சத்தம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்து திரும்பி யாரென்று பார்க்கவைத்தது. பாதரும் யாரென்று எட்டி பார்க்க நானும் யாரென்று திரும்பிப் பார்த்தேன். ஓடிவந்த அந்த பெண் செய்வதறியாது என் அருகே உள்ள இருக்கையில் மண்டியிட்டு உட்கார முயல, காலிடறி என் மீது படர்ந்து விழுகின்றாள். இதில் அவள் கூந்தல் என்முகத்தை மறைத்து என்னை திணறச் செய்ய, திணறிக்கொண்டே நான் பின்னோக்கி விக்கி மீது விழுந்தேன். விக்கி அவன் பின்னால் இருந்த பாட்டி மீது விழுந்தான். இது தொடர் வீழ்ச்சியாக அந்த வரிசையில் அமர்ந்திருந்த எல்லோரையும் விழச் செய்தது.
அவள் என் மீதிருந்து ஏழ அவளது முகத்தை முதல் முறையாக பார்த்தேன், பார்த்த மாத்திரத்தில் எனக்குள் சினிமாவில் வருவது போல் பாட்டு கேட்க தொடங்கியது.
"உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?....
என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே...."
அவள் எழுந்து என்னை பார்த்து என்னமோ சொல்கின்றாள் என்பது மட்டும் தெரிந்தது ஆனால் காதில் ஒன்றும் விழவில்லை. விக்கியும் அவளும் ஒரே சமயம் கை நீட்ட, விக்கியின் கையை உதறி அவளின் கைகளை இறுகப்பிடித்து எழுந்தேன். அவளது கைகளை விடாமல் பற்றிக்கொண்டு சிரித்தவாறு நிற்க, விக்கி என்னை குலுக்கி நிதர்சனத்துக்கு கொண்டுவந்தான்.
பாட்டு நின்றது, நிதர்சனத்தில் எல்லாரும் என்னை பார்த்துக்கொண்டிருந்தனர். "Excuse Me" என்று அவள் கண்களால் என் கையை பார்த்து சைகை செய்ய, சடால் என்று அவள் கைகளை விடுவித்தேன். பாதர் இருமுறை இரும்ப எல்லோரும் நிதானமானார்கள. அவள் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே என் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்.
விக்கி என் சட்டை காலரை இழுத்து என் கழுத்தின் வலப்பக்கத்தில் கை வைத்து தொட்டுப்பார்க்க சொன்னான், தொட்டுப் பார்த்தேன் பிசு பிசு என்றிருந்தது. முகர்ந்து பார்த்தேன் நல்ல நறுமணம் இருந்தது. "இது அவளோட லிப்ஸ்டிக் மார்க், விழும் போது உன் மேல....." என்று அவன் சொல்ல, நின்று போன பாடல் என்னுள் மீண்டும் பாட தொடங்கியது...
"சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே
நனைக்கத் தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
தன்னழகை நனைக்கத் தெரியாதா
அடைமழையே நனையத்தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா....."
பூசை முடிந்து கூட்டம் கலைய கூட்ட நெரிசலில் அவளை தொலைத்தேன். கூட்டத்தின் நடுவே பலமுறை எம்பி எம்பி பார்த்தேன் அவளை காணவில்லை. கடைசி முறை எம்பிய பொழுது பாதர் மீது விழுந்தேன். பாதர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்! பாதர் எழுவதற்குள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன். தூரத்தில் பாதர் திட்டுவது நன்றாகவே கேட்டது காதில் வாங்கி கொள்ளாமல் ஓட்டம் பிடித்தேன்.
நடந்ததை எண்ணி தனியே சிரித்துக்கொண்டு ரோட்டில் நடக்க, விக்கி அருகில் சைக்கிளை உருட்டி கொண்டு என்னை பார்த்தவாறு நடந்து வந்தான். வெறுப்பில் சைக்கிள் பெல்லை அடித்து எனது பகற்கனவை கலைத்தான். மௌனமாக சற்று தூரம் நடந்தோம். திரும்பவும் எனக்குள் நான் சிரிக்க ஆரம்பித்தேன். விக்கியும் சிரித்துக்கொண்டே "ரொம்ப பீல் பண்ணாதே, அவ எல்லாம் உனக்கு கிடைக்க மாட்டா!! அவளுக்கு கண்டிப்பா பாய் பிரெண்டு இருப்பான்" "உனக்கு ஏன் டா இவ்வளவு காண்டு?" என்று நான் கோபமாக சீற, "பின்ன என்ன டா படமா காட்டுறீங்க!! அவ வருவாளாம் இவர் மேல விழுவாளாம்! கழுத்துல முத்தம் கொடுப்பாளாம்!! உண்மைய சொல்லு நீ தானே அந்த பொண்ணு கால தட்டி விட்டே" என்று வெறுப்பேற்ற, நான் பதிலுக்கு "உனக்கு அவ லாவண்யாவிட காலரா இருக்கான்ற காண்டு" என்று சொல்ல, "ஐயையோ...அப்பப்பா...ரொம்ப காண்டா இருக்கு டா ரொம்ப காண்டா இருக்கு...போடாங்கொய்யா!! எனக்காவது லாவன்யான்னு ஒருத்தி இருக்கா! உனக்கு?........ ஓ அந்த குழந்தை பொண்ணு டேஸி இருக்காள! மறந்துட்டேன் பாரேன்! அவ பெரியவளாகி உன்ன தேடி வந்து 5 ஸ்டார் சாக்லேட்டோட "Excuse Me" ன்னு நிற்பாளே!" என்று கூறி விக்கி நக்கலாக சிரிக்கின்றான். "டேய் வேணாம் டேஸிய இதுல இழுக்காதே.." என்று நான் மறுபடியும் சீற "உன்னெலாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது டா...திருத்த முடியாது...." என்று கூறி விக்கி என்னை எரிச்சலேற்ற, அவன் சைக்கிளை நான் காலால் ஓங்கி உதைக்க, பின்னாலிருந்து ஒரு குரல் "Excuse Me" என்றது. திடுக்கிட்டு திரும்பினோம். அங்கே நங்கள் தேவாலயத்தில் பார்த்த அதே பெண் கையில் 5 ஸ்டார் சாக்லேடடோடு நின்றுகொண்டிருந்தாள்.
விக்கியின் சைக்கிள் அவனது கை நழுவி கீழே விழுகின்றது. அவள் எங்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்!
தொடரும்...
இப்படிக்கு,
சுப்பு (எ) சுப்பிரமணி
இந்த பொய் கதையை எழுதுவது,
ஷிவ் (எ) சிவராஜ் பரமேஸ்வரன்.