top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

காலம் கடந்த காதல் கதை - இரண்டு

Updated: Aug 26, 2022



மன்னிக்கவும் நான் ஒரு பெரும் சோம்பேறி! அதிலும் ஒரு உண்மை கதை சாரி பொய் கதை எழுத வேண்டும் என்றால் சொல்லவா வேண்டும்!!! சரி கதையை எப்படி கொண்டு செல்வது என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது நண்பன் விக்கி போன் செய்தான் "டேய் என்ன டா இப்படி எழுதியிருக்கே! மூஸா பேரே அப்படியே மூஸான்னு போட்டுட்டே!" நான் சிரித்துக்கொண்டே "அட உன் பேர்கூடத்தான் போட்டு இருக்கேன் நீ கோச்சுக்கிட்டியா என்ன? நம்ம மூஸா டா! சரி இத சொல்லத்தான் கூப்பிட்டியா?" சிரித்துக்கொண்டே அவன் "இல்ல மூஸா பேர சுப்பு பேர எல்லாம் கரெக்டா போட்டு இருக்கே! அதென்ன மாமி!! மதுமிதா!! அவங்க பேரெல்லாம் எங்க?" என்று நக்கலாய் கேட்க, மூஸாவும் சுப்புவும் என்னை மூஸாவின் தென்னந்தோப்பில் கட்டிவைத்து அடிப்பது போல் நினைவுகள் கண்முன் வந்து சென்றது! சரி கதைக்கு வருவோம்...


மூஸாவும் நானும் பெட்ரோல் பங்கில் தேதியை பார்த்த அதிர்ச்சியில் மீண்டு வர கொஞ்சம் நேரம் ஆனது! இந்த டைம் ட்ராவல் எல்லாம் படத்தில் பார்த்ததோடு சரி நிஜத்தில் இப்படி எல்லாம் நடக்கும் என்று யார் எதிர்பார்த்தது. நடந்தது நடந்தது வா வீட்டிற்கு போலாம் என்று மூஸாவை அழைத்தேன் அவன் மலை சாய்ந்தது போல் மயங்கி கீழே விழுந்து கிடந்தான்! பார்க்கத்தான் மூஸா ஆஜானுபாகுவாக இருப்பான் ஆனால் உண்மையில் சற்று வெகுளியும் பயமும் உடையவன்! எங்கள் கையில் இருந்த 500ம் 1000மும் இப்பொழுது செல்லா காசு! சில்லறைகள் செல்லுபடி ஆகின. அது ஒரு பெருத்த ஆசுவாசமாக இருந்தது 5 ரூபாய்க்கு புளிப்பு மிட்டாய் கிடைத்தது 10 ரூபாய்க்கு பாக்கெட் தண்ணீர் கிடைத்தது. காலத்தின் வேகம் பொருளின் விலை உயர்வில் தெரிந்தது! கருமம் கதை எழுத நினைச்சா எகனாமிக்ஸ் பேசிட்டு இருக்கேன், எங்க விட்டேன்! மயங்கிய மூஸா!


முகத்தில் தண்ணீர் தெளித்தும் சினிமாவில் வருவது போலவே கலங்கி எழுந்தான் மூஸா! "நான் எங்க இருக்கேன்! நான் இப்படி இங்க வந்தேன்!" என்று என்னை பார்த்து கேட்க நான் திரும்பி திரும்பி பார்த்து "மூஸு இப்போ எதுக்கு இந்த ஆக்ட்டிங்? இங்க எந்த பொண்ணும் இல்லையே?" நிலைமை உணர்ந்த மூஸா "காலேஜ் ஞாபகத்துல பண்ணிட்டேன்!" என்று கூறி என் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை புடுங்கி குடிக்க ஆரம்பித்தான், காறித்துப்பினானான் "என்ன இழவு தண்ணி டா இது?" "குழா தண்ணி!!" "மினெரல் வாட்டர் வாங்க வேண்டியது தானே" "அதுக்கு காசு ஏது? பெட்ரோல் 200 ரூவா தான் அக்வா பீனா தண்ணி 300 ரூவா!" திரும்பவும் அவன் மயங்க போக "டேய் டேய் தண்ணி இல்ல டா" என்று கூறி காலரை பிடித்து இழுத்து நிற்கவைத்தேன்.


மொத்த பர்ஸையும் காலி செய்து 200 ரூபாய்யை சில்லரையாக பெட்ரோல் பங்க் முதலாளியிடம் கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து சென்னை வந்து சேர்ந்தோம்! சென்னையில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை அதே குண்டும் குழியும் உள்ள சாலைகள்! புது பாலங்கள்! வழி கேட்டு ஒரு வழியாக பீச் ரோடு வந்த பொழுது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது! கடல் அரித்து பாதி சென்னை கடலுக்கு அடியில் அமைதியாய் தூங்கி கொண்டிருந்தது. அங்கிருந்த நினைவு தூணில் ராயபுரம் தண்டையார்பேட்டை என்னூர் காசிமேடு என்று கடல் சார்ந்த பகுதிகள் மூழ்கின என்று எழுதி இருந்தது! சீறி பாய்ந்த அலைகளை பார்த்து என் கண்கள் ஈரமாகியது. முதல் முறை அனாதை என்ற வார்த்தைக்குள் இருந்த வலியின் அர்த்தம் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருக்க! அந்த வழியாக வந்த ஒரு போலீஸ்காரர் எங்கள் பல்சர் வண்டியை பார்த்து சந்தேகத்தின் பேரில் பட்ரோலுடன் எங்களிடம் வந்தார்.


போலீஸ் மூஸாவிடம் வந்து விசாரிக்க, மூஸா திருதிருவென்று முழித்தான்! ஐடி புரூப் காட்ட சொல்ல எங்களிடம் இருந்ததோ டிரைவிங் லைசென்ஸ்ஸும் காலேஜ் ஐடி கார்டும் அதுவும் 30 வருடங்கள் முந்தைய ஐடி புரூப்!! பட்ரோல் ஆபீஸ்ர் கோபத்துடன் மூஸாவை அறைய கை ஓங்க! அறைய வந்த கையை தடுத்து பஞ்ச் டயலாக் ஒன்று பேசினான் "அறந்தாங்கி மந்திரி அபூபக்கர் தெரியுமா? அவர் எனக்கு சித்தப்பா! ஒரு போன் போட்டேன் மொத்த சோலி முடிஞ்சிடும்!" அத்தோடு நாங்கள் இருவரும் ஜெயிலில் அடைக்க பட்டோம்! இந்த 30 வருடங்களில் சென்னை மாறியதோ இல்லையோ ஜெயில் மாறியது. நல்ல குஷன் உள்ள பலகை நாற்காலி! ஏர் கூலர்!! வாஷ் பேசின்!! தனி பாத்ரூம்!! நாங்கள் ஜெயிலின் அதிசயங்களை ரசித்துக்கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் வந்தார்!


பட்ரோல் ஆபீஸ்ர் எங்களிடம் இருந்து வாங்கிய ஐடி புரூப் மற்றும் நாங்கள் சொன்ன டைம் ட்ராவல் கதையை இன்ஸ்பெக்ட்டரிடம் சொன்னார்! இன்ஸ்பெக்டர் "பைத்திக்கார ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோற கேஸ்ஸ ஏன் யா இங்க கொண்டு வந்து உயிர வாங்குறீங்க? கீழ்ப்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரிக்கு போன் போட்டு வந்து கூட்டு போக சொல்லு" என்று சொல்லியவாறு அந்த காலேஜ் ஐடி புரூப்பை பார்க்கின்றார்! சட்ரென்று நாற்காலியை விட்டு எழுகின்றார்! நேரே ஜெயிலுக்குள் வருகின்றார்! எங்களை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாகி நிற்கின்றார். மூஸாவும் நானும் கொஞ்சம் தடுமாறி "விக்டரு!!" என்று சொல்ல விக்டர் தனது trademark சிரிப்புடன் "மச்சி" என்று சொல்லி சிரிக்க, அவனது வழுக்கை தலையில் ஒளிவட்டம் தெரிந்தது.


சங்கீதாவில் இட்லியும் தோசையும் ஆர்டர் செய்து பசியில் இருக்க விக்டர் பேச ஆரம்பித்தான். மூஸா பதில் பேசிக்கொண்டிருக்க நான் சர்வர் வரும் திசையை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போ விக்டர் "எங்கடா நீங்க ரெண்டு பேரும் ஓடி போனீங்க? ஓடி போன அன்னைக்கு எப்படி இருந்திங்களோ அப்படியே இருக்கீங்க!!" என்று கேட்க மூஸா விவரமாக அந்த subway கதையை சொன்னான். விக்டருக்கு நம்புவதா வேண்டாமா என்றுறிருந்தது. வேறு வழி இல்லாமல் நம்பினான். ஆனால் அப்படி ஒரு subway மதுரவாயலில் அவன் 40 வருடங்களில் கேள்விப்படவில்லை என்றும் சொன்னான். பசியில் இருந்ததால் நான் எதை பற்றியும் கவலை படாமல் சாப்பாட்டில் குறியாக இருந்தேன். பசி ஆறியதும் குடும்பம், நண்பர்கள், சுனாமி எல்லாம் நினைவுக்கு வந்தனர். சுனாமி பற்றி விக்டரிடம் விசாரித்தேன் அவன் சொன்னதில் எனக்கு இனி யாரும் இல்லை என்பது உறுதியானது. கொஞ்சம் நேரம் மௌனமாய் இருந்தேன். பிறகு விக்கி சுப்பு மாமி வித்யா மதுமிதா பற்றி விசாரித்தேன். மதுமிதா என்று சொன்னவுடன் மூஸா திடுக்கிட்டு அவள் கல்யாணம் பற்றி கேட்டான்.


மூஸா ஏர்போர்ட் வராததால் மதுமிதா திரும்பவும் வீட்டிற்கு போய்விட்டாள். நிச்சயித்தது போல அவளுக்கும் அவன் முறை பையனுக்கும் கல்யாணம் நடந்தது! மூஸாவின் மச்சான் மதுவின் அப்பா தான் மூஸாவை கடத்தி கொன்றுவிட்டார் என்று கேஸ் நடத்தினார் தகுந்த ஆதாரம் இல்லாததால் கேஸ் தோற்றது. மதுவின் அப்பா நேரடியாக மச்சானை சந்தித்து தனக்கும் மூஸாவின் மறைவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுளை அடித்து சத்தியம் செய்தார். இதை எல்லாம் கேட்டு மூஸா என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.


என் அம்மாவும் அப்பாவும் என்னை தேடி, வேண்டாத கோவில்களும் ஏறாத சவக் கிடங்கும் இல்லை என்று விக்டர் சொன்ன பொழுது மனம் கனத்தது!! கடைசி வரை நான் வருவேன் என்று காத்திருந்து சுனாமியால் கரைந்தனர்.


நாங்கள் போன பிறகு சுப்புவும் விக்கியும் காலேஜில் சிரிக்க மறந்தனர். இப்பொழுது சுப்பு காஞ்சிபுரத்தில் ஒரு மோட்டார் கம்பெனி நடத்தி வருவதாகவும் விக்கி சென்னையில் கெமிக்கல் பிசினஸ் செய்வதாகவும் விக்டர் சொன்னான்.


இப்படி பலரும் வெவ்வேறு தளங்களில் செட்டில் ஆகி, கல்யாணம் ஆகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கும் போட்டோவை காண்பித்தான். நாங்கள் இருவரும் வெறுமையை உணர்ந்தோம்! எங்கே செல்வது? யாரை பார்ப்பது? இனி வாழ்க்கையில் என்ன? சாப்பாட்டிற்கு என்ன வழி என்று யோசிக்கும் பொழுது...


shiv சாப்பாடு ரெடி! வந்து சாப்பிடு! என்று என் மனைவி அடுக்கலையிலிருந்து கத்த, எனக்கு கதை மறந்தது! பிரியாணியின் நறுமணம் என் மூக்கை துளைத்தது! மன்னிக்கவும் அது வெறும் பிரிஞ்சி தான் பிரியாணி மசாலா போட்டுவிட்டு என்னை ஏமாற்றிவிட்டனர்!


சாப்பிடும் பொழுது என் மனைவி,


"கதை எப்படி வந்திருக்கு!"

"ஏதோ சுமாரா வந்திருக்கு!"

"என்ன தீம்?"

"டைம் ட்ராவல் - சயின்ஸ் பிக்ஷன்"

"Back to the future பாத்தியா?"


பொறை ஏறியது, கருமம் நாம சொந்தமா யோசிச்சா கூட எவனுக்கோ இன்ஸ்பிரஷன் கிரெடிட் கொடுக்க வேண்டி வரும் போல!!


"நான் சொந்தமா யோசிச்சது மா!!"

"ஓஓஓஓஓ....."


அந்த ஓஒ...வில் என் பொறை மேலும் அதிகரித்தது....


பொறை அடங்கிய பின் கதையை தொடர்கின்றேன்...காலதாமதத்திற்கு மன்னிக்கவும்....


கற்பனை கலந்து எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.

7 views0 comments
bottom of page