Sivaraj Parameswaran
தூரிகா
Updated: Aug 26, 2022

தியாகராய கல்லூரி மெட்ரோ நிறுத்தத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன். அங்கிருந்த டிவி திரையில் விமான நிலையத்திற்கு 8 நிமிடங்கள் என்று காண்பித்தது. நான் எப்பொழுதும் ஏறும் மூன்றாவது வாசலுக்கு சென்றேன் வேறொன்றும் இல்லை அந்த வாசலுக்கு அருகில் தான் உட்காரும் இடம் இருக்கின்றது. என்றும் போல் இன்றும் காலியாக இருக்க நான் உட்கார்ந்தேன். டிவி திரையில் 7 நிமிடங்கள் என்று காண ஹெட் செட் மாட்டிக்கொண்டு என்ன பாட்டு கேட்கலாம் என்று தேட அங்கு சுத்தமாக டவர் இல்லை என என் போன் சிக்னல் செய்தது. சோகத்துடன் முன்பே பதிவிறக்கம் செய்த பழைய பாடலை தேடினேன். நவரசா படத்தில் மிகவும் கொடுமையான அந்த கொடூரமான "கிட்டார் கம்பின் மேலே நின்று" குறும்படத்திலுள்ள உள்ள அருமையான பாடல் "தூரிகா" இருந்தது, அந்த பாடலின் மேலே உள்ள பிலே பட்டனை அழுத்த, விட்ட இடத்திலிருந்து பாடல் பாடத்தொடங்கியது,
"தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..."
இந்த பாடல் வரிகள் என் காதினுள் செல்ல எஸ்கேலேட்டர் வழியே சிகப்பு நிற துப்பட்டா அணிந்து ஒரு பெண் நேரே என்னை பார்த்து இறங்கி வந்தாள்! அவள் நேர என்னை நோக்கி நடக்க, மெட்ரோ நிலையத்தில் உள்ள ஆட்டோமேட்டிக் லைட்ஸ் பளீர்ன்று மிகவும் பிரகாசமாக ஜொலித்தது! அச்சமயம் அந்த கிட்டார் கம்பி படத்தில் நடித்த அந்த குண்டு பெண் ஒரு கெட்ட வார்த்தை சொல்லவளே (what the fuck) அந்த அதே கெட்ட வார்த்தையை நான் உணர்ந்தேன்.
அவள் என்னை கடந்து இங்கும் அங்கும் நடக்க! என் கண்கள் எனது கட்டுப்பாட்டை இழந்து இங்கும் அங்கும் அவளுடன் அலைந்தது! முக்கியமாக ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்!! அவள் மாஸ்க் அணிந்து இருந்தாள் நானும் மாஸ்க் அணிந்து இருந்தேன்! அதனால் எங்கள் கண்கள் மட்டும் பல முறை நேர் கோட்டில் சந்தித்து கொண்டது! வேறு அங்கு பார்த்து பரவசப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லாததால் நான் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்! எங்கள் இருவரை தவிர ஒரு மெட்ரோ பெண் காவலாளியும் அங்கு இருந்தாள். அவள் என்னையும் அவளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். பாவம் காவலாளி!!
இரயில் வர ஒரு நிமிடம் என்று சொல்ல எனக்கு அதிர்ச்சி 7 நிமிடம் இருந்ததே என்று நினைக்க! இரயில் வந்தது நாங்கள் இருவரும் ஏறினோம் காலி இருக்கைகள் இருக்க அவள் என் நேர் எதிரில் அமர்ந்தாள்! கை கட்டிக்கொண்டு நேரே பார்க்க வேண்டும் இல்லை எனில் கீழே கால்களை பார்க்க வேண்டும்! யாரிடமாவது போன் செய்து பேசலாம் என்றால் அங்கு சிக்னலும் இல்லை! மேலே ஜன்னலருகே எவ்வளவு நேரம் தான் திருக்குறளை படிப்பது போல நடிப்பது அதுவும் தப்பாக எழுதிய திருக்குறள்! சரி இனி பயணிகளின் கால்களை பார்ப்போம் என்று கீழே பார்த்தால் பக்கத்தில் உள்ள ஒருவர் அவர் பக்கத்தில் இருக்கும் பெண்ணை காலால் உரசல் விளயாட்டை விளையாடி கொண்டிருந்தார்! அந்த கருமத்தை பார்க்க சகிக்காமல் திரும்பவும் மேலே பார்த்தேன் (அவளும் அதை பார்த்திருப்பாள் போலும்!) நான் பார்த்ததை பார்த்து சிரித்தாள்! எனக்கு வெட்கம் தலைக்கு ஏறியது! என்னை அறியாமல் சிரித்தேன், மாஸ்க்கின்னுள் எனது சிரிப்பு வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
முதல் முறையாக மெட்ரோ ரயில் சற்று வேகமாக செல்வதாக உணர்தேன்! போன் ஒலித்தது, நேரம் கெட்ட நேரத்தில் போன் ஒலித்தால் யாராக இருக்கும் வேறு யார் என் மனைவி தான்! போனை எடுத்தேன் "மெட்ரோல வந்துட்டு இருக்கேன் மா!!" மறுபடியும் சிக்னல் கட்டாக சிரிப்புடன் போனை பார்க்க அவள் என்னை பார்த்த பார்வை மாறி இருந்தது! இப்பொழுது அவள் கோபமாக இருந்தாள்! புரிந்து விட்டது WIFE என்று கொட்டையாக நான் பதிவேற்றம் செய்தது பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் உள்ளவனால் கூட படித்திருக்க முடியும் இவளாள் படிக்க முடியாத என்ன! பிறகென்ன வழக்கம் போல் சைதாப்பேட்டை நிறுத்தத்தில் இறங்க நான் எழுந்து நின்றேன்! அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை! நானும் கொஞ்சம் சோகம் ஆனேன்! என்ன செய்ய என் வயது அப்படி!
எந்த உணர்வும் இல்லாமல் இறங்கினேன்! திரும்பி பார்க்காமல் நடந்தேன்! இப்பொழுதும் அதே பாடல் தான் லூப்பில் ஓடிக்கொண்டிருந்தது! எதிர் திசையில் ரயில் வேகமாக என்னை கடந்து சென்றது! எஸ்கேலேட்டரில் நான் ஏறு முற்படும் பொழுது ஒரு சிறுவன் என்னிடம் ஓடி வந்து "தாத்தா உன் எதிர்ல உட்கார்ந்திருச்சுல ஒரு பாட்டி! சிகப்பு சுடிதார் கூட போட்டு இருந்தாங்கல அவங்க இந்த லெட்டர உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க" என்று சொல்ல என்னுள் மறுபடியும் அதே வரிகள்,
"தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..."
பழைய மெட்டை வாசித்த இளையராஜாவுக்கும் அதை வேறு விதமாக புதிதாக மெட்டிசைத்த கார்த்திக்கும் இந்த வரிகளை எழுதிய மதன் கார்க்கிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சரவணன் (எ) சூர்யா
(President Of Saidapet Senior Citizens Association)
இதை ஒரு கதையாக எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.
உண்மையான சரவணனுக்கு வயது மிகவும் குறைவு அவர் அமெரிக்காவில் வசிக்கின்றார், அவருக்கும் இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறேன்! அவர் மிகவும் நல்லவர் வல்லவர் ராமர் போன்ற நேர்மையானவர்! டேய் அப்போ வாலிய பின்னாடி இருந்து அம்பு எய்து கொன்னது யாரு? சாரி மன்னிக்கவும் உண்மையானவர்!! சரவணன் சார் ரொம்ப நல்லவருங்க dot!!