Sivaraj Parameswaran
நம்பிக்கையின் கதை
Updated: Aug 26, 2022

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் நடந்த ஒரு கதை இது. ஆல்பர்ட் ஹான் என்றழைக்கப்பட்ட துரை ஒருவர் இருந்தார் இவர் வானசாஸ்திரத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தார். அடிப்படையில் இவர் ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பாளர். இந்தியாவில் நடக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களை எதிர்ப்பவர். மக்களுக்கு சேவை செய்வதில் நல்லுள்ளம் கொண்டவர்.
இப்படி இருக்கையில் அவர் இருந்த கிராமம் மிகவும் கடும் வறட்சிக்கு உள்ளானது. மழை வேண்டி ஓமம் நடத்த ஊர் மக்கள் தீர்மானித்தனர்! இந்த செய்தி துரை அவர்களுக்கு தெரிய வருகின்றது! அவரும் அவருடைய சிஷ்யர்களை கூட்டிக்கொண்டு வந்து அந்த ஓமத்தை கண்டு எல்லி நகையாடுகின்றார்! இதை கவனித்த ஒரு சிறுவன் அவரிடம் வந்து "ஏன் சிரிக்கிறீர்" என்று கேட்க, "மழை எல்லாம் பூஜை செய்தால் வராது! அதற்கு ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வேண்டும்! வானம் கருக்க வேண்டும் இடி இடிக்க வேண்டும் சார்ஜிங் டிஸ்சார்ஜ் ஆகவேண்டும்" என்று அறிவியல் ரிதியாக கொக்கரிக்கின்றார். இதை அனைத்தையும் பொறுமையாக கேட்ட சிறுவன் "நீங்கள் எப்பொழுது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கின்றீர்" என்று கேட்க. அவர் தனது கணக்கு புத்தகத்தை எடுத்து சில பல கணக்குகளை போட்டுப்பார்த்து "இந்த வாரம் முடிவில் இடியுடன் கூடிய மழை வரும்" என்று சொல்கின்றார். அவரும் பதிலுக்கு நக்கலாக இதே கேள்வியை சிறுவனிடம் கேட்க அவன் "இரண்டுவாரத்தில் பூஜை முடியும் மகா தீபம் ஏற்றும் பொழுது மழை வரும்" என்று சொல்கின்றான். சரி பார்ப்போம் என்று இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு வேறு வழி செல்கின்றனர்.
ஒரு வாரம் கழித்து சிறுவன் துரை யை பார்க்க அவரது வீட்டிற்கு செல்கின்றான், துரை அச்சிறுவனை கண்டு "நீ இங்கே என்ன செய்கின்றாய்?" என்று கேட்க "ஒரு வாரம் கழித்து மழை வரும் என்று சொன்னீரே மழை வரவில்லையே" என்று கேட்க துரைக்கும் அவரது சிஷ்யர்களுக்கு கோபம் பொங்கி தலைக்கேறியது இருப்பினும் அடக்கிக்கொண்டு மறுவாரம் இவனது அவல நிலை பார்த்து பேசிக்கொள்ளலாம் என்று சிரித்து வழிஅனுப்புகின்றார்.
மறுவாரம் மகா தீபம் ஏற்றும் நாள் வந்தது! வானம் தெள்ள தெளிவாக இருந்தது மழைக்கான ஒரு கரு மேகமும் தென்படவில்லை! துரை அசட்டு சிரிப்புடன் தனது சீஷர்களுடன் சிரித்துக்கொண்டிருந்தார். தீபம் ஏற்றும் தருணம் வந்த பொழுது! அங்கு நடந்த ஒரு சம்பவம் கண்டு துரை ஆச்சரியம் கொண்டார்! தீபம் ஏற்றியவுடன் இடி எங்கோ இடித்தது! காற்று வேகமாக அடித்தது! முதல் மழைத்துளி துரையின் கன்னம் மேலே விழுந்தது! அவர் கண்ட அந்த ஆச்சரியம் அன்று கூடி இருந்த அனைவரும் தீபம் ஏற்றும் முன் அவரவர்கள் தங்கள் குடையை விரித்து பிடித்துக்கொண்டது தான்.
அச்சிறுவன் துரையிடம் வந்து ஒரு குடையை இனாமாக கொடுத்து "நம்பிக்கை தான் எல்லாம்! நீங்கள் கூறும் பொழுது என்னை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு இருந்ததே தவிர அதில் உங்களுக்கு நம்பிக்கை சிறிதளவும் இருந்திருக்க வில்லை! இங்கே நீங்கள் பார்த்தால் எங்கள் நம்பிக்கை தெரியும்!" என்று சொல்லிக்கொண்டு அவன் செல்ல துரைக்கு நம்பிக்கையின் மீது முதல் முறை நம்பிக்கை வந்தது!
இங்கு துரை போலத்தான் நாமும் நம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லாமல் தான் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
கற்பனை கலந்து எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்