top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

படையப்பா பிச்சை

Updated: Aug 26, 2022அவன் நாள் தவறாமல் தினந்தோறும் காலை 6 மணிக்கு தனது அழுக்கு பையோடு அம்பாள் கோவிலுக்கு வருவான். கொரோனா காலத்திலும் வந்து கொண்டிருந்தான். அவன் வருவான் கோவில் வாசலில் நிற்பான் அம்பாளிடம் முறையிட்டு பேசுவான்! திட்டுவான்! மழலை மொழி போல் ஒரு புரியாத புது மொழியில் பேசுவான்! அவனது செயலைக்கண்டு சிலர் அவனை ஏசினார்கள் சிலர் அடித்தார்கள்! சிலர் அரவணைத்தார்கள்! ஆயினும் பலர் அவனை அருவெறுக்கவே செய்தார்கள். இருப்பினும் அவன் யாரையும் ஒரு இம்மி அவ்ளவுகூட வெறுத்ததில்லை. எதை சொன்னாலும் சிரித்துக்கொண்டே அவர்களை கடந்து சென்றுவிடுவான். எப்பொழுதும் இறுகிய முகமோடு வாழும் நமக்கு அவனது சிரிப்பு முகம் விசித்திரமாகவே தெரிந்தது. எப்பொழுதும் சிரித்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டு யாரிடமும் பிச்சை கேட்காமல் யாராவது அவர்களாகவே முன் வந்து கொடுத்தால் மட்டும் வாங்கி சாப்பிடுவது அவன் வழக்கம். இருந்தும் அவனை பிச்சைக்காரன் என்றுதான் அழைத்தார்கள் அதிலும் படையப்பா பிச்சை என்ற புனைப் பெயரும் உண்டு அதற்கு என்ன பெயர் காரணம் என்ன வென்று எனக்கு தெரியவில்லை. சுருக்கமாக அவனை ஒரு மனநோயாளி பிச்சைக்காரன் என்று முத்திரை குத்திவைத்தார்கள். அவனும் அவ்வாறே வாழ்ந்தான்.


அவனிடம் அன்பும் கருசனையும் காட்டும் ஒரே நபர் என்று சொன்னால் அது சந்திரம்மா என்கின்ற சந்திரா தேவி தான். பழம் வியாபாரம் செய்பவள், நல்லவள் ஏழைகளுக்கு அழுகும் முன் நிலையில் உள்ள பழங்களை இலவசமாக வழங்குபவள். பள்ளி குழந்தைகள் பள்ளி முடிந்து செல்லும் பொழுது நிறம் மாறி இனி விற்கபடாது என்று தெரிந்த நல்ல பழங்களை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குபவள்! அழுகிய பழங்களை குப்பையில் கொட்டாமல் ரோட்டில் மேயும் மாடுகளுக்கு வழங்குபவள். அவள் ஒரு தானவள்ளல் என்று நான் சொல்லவில்லை இருப்பினும் தன் சக்திக்கு உகந்த படி அவள் தானம் வழங்கும் தன்மை உடையவளாகவே இருந்தாள். மத்யம வயது என்றாலும் குமரியாகவே வாழந்து வந்தாள். அவளை தொந்தரவு செய்யாத ஆடவர்களே இல்லை என்ற நிலையில் தான் வாழ்ந்து வந்தாள். இதில் பெண்ணை காக்கும் காவல் தெய்வங்களும் அடங்குவர்! இருந்தும் அவள் தனிமையின் சுதந்திரத்தை சுதந்திரமாக வாழ்ந்து வந்தாள். ஒரு முறை இந்த படையப்பா பிச்சையை இவள் கண்ணில் பட அன்று முதல் அவள் மிகுந்த கருசனையோடு அவனை பார்த்துக் கொண்டாள். மூன்று வேலை உணவு வழங்கி வாரம் ஒரு முறை முடிவெட்டி குளிப்பாட்டி கந்தல் துணியை மாற்றி புது துணி அணிவித்து வாரம் ஒரு முறை அவனை ஒரு புது மனிதனாக மாற்றினாள்.


காலம் வெகு வேகமாக ஓடியது.


வாரம் ஒரு முறை என்பது இருமுறை என்றானது. இருமுறை என்பது தினம் தினம் என்றானது. படையப்பா பிச்சை இன்று தினமும் குளித்து அவனது நித்ய செயலான அம்பாளை சந்திக்கும் செயலை தொடர்ந்து கொண்டிருந்தான். இத்தனைக்கும் அவன் தனுக்குத்தானே அல்லாது வேறொருவரிடமும் இதுவரை பேசியது கிடையாது.


இவ்வாறாக இருக்க 5000 வருட கலாச்சாரம் இந்த உலகையே கட்டி ஆண்ட பாரம்பரியம் உள்ள நம் சமூக சாஸ்த்திரத்தில், படையப்பா பிச்சைக்கும் சந்திரம்மாவிற்கும் கள்ள உறவு என்று வேண்டாத ஒரு வதந்தியை ஒரு தந்தைக்கு பிறக்காதவன் பரப்ப ஆரம்பித்தான். அதுவரை பைத்தியமாக, அழுக்கு மூட்டையாக, பிச்சைக்காரனாக இருந்த படையப்பாவை ஒரு ஆணாக கண்டுகொள்ளாத எவரும் இப்பொழுது ஒரு ஆணாக! அதுவும் சமூக சீர்கேடு ஆணாக! கலாச்சார கொள்ளையனாக! கேடுகெட்ட கயவனாக! கண்டுகொள்ள ஆரம்பித்தார்கள். பெண் பித்தன்! பொம்பளை பொறுக்கி! என்ற புது பெயர்களும் அவனுக்கு வந்து சேர்ந்தன. படையப்பாவை அன்போடு பார்த்தவர்கள் இன்று வெறுப்போடு பார்க்க ஆரம்பித்தனர். சந்திரம்மா எந்தக் குறை நிறையுமின்றி என்றும் போல் இன்றும் அவனுக்கு உணவு அளித்தும் அவனை பராமரித்து வந்தாள். செவிடன் காதில் சங்கு ஊதியது போல் சந்திரம்மா எதுவும் காதில் விழாதது போல் வாழ்ந்தாள்! பாரதி கண்ட புதுமை பெண் இவளோ என்று யோசிக்க காரணம், ஒன்று! அவளிடம் யாருக்கும் இதை பற்றி நேருக்கு நேர் நின்று பேச தைரியம் இல்லை. இரண்டு! அவள் உடலால் மட்டுமே ஒரு பெண், 10 ஆடவர் ஒன்று கூடி வந்தால் கூட ஒற்றை ஆளாய் நின்று 10 ஆடவர்களையும் பந்தாடுவாள். ஆக ஆண்களும் சரி பெண்களும் சரி அவள் முதுகிற்கு பின்னர் தைரியமாக பேசினர். அதனால் வீராதி வீரர்கள் சூராதி சூரர்கள் எப்பொழுது போலவும் பாவப்பட்ட நோஞ்சானாக இருக்கும் அப்பாவியான படையப்பாவையே துன்புறுத்தினர்.


அம்பாளுக்கு ரொம்பவும் விசேஷமான நாள் வெள்ளிக்கிழமை, அன்று கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது! அன்றைய தினம் கொரோனாவை எல்லாம் ஏட்டிக்கு போட்டியாக எல்லோரும் காற்றில் பறக்க விட்டோம். நிற்க கூட இடம் இல்லை. அம்பாளை தரிசிக்க வி.வி.ஐ.பி-களும் சினிமா பிரபலங்களும் செக்யூரிட்டி காவலுடன் வந்து காத்துக்கொண்டிருந்தனர். வழக்கம் போல் படையப்பாவும் வந்து சேர்ந்தான். கூட்டம் அதிகமாக இருக்க அவன் அங்கிருந்த தடுப்பு கம்பியின் மீது ஏறி அம்பாளை தரிசித்து அம்பாளிடம் கை காட்டி பேச ஆரம்பித்தான். அவனது செயல் கண்டு கோபம் அடைந்த கற்புக்கரசர்கள், ஏகபத்தினி விரதர்கள், சமூக அரவலர்கள் என எல்லோரும் ஒன்று கூடி ஒரு தந்தைக்கு பிறக்காதவனிடம் புகார் கூறினர். அவன் யாரென்றால் சந்திரமாவின் மீது அடங்காத காமம் கொண்டு அவளிடம் செருப்படி வாங்கியவன். தீரா பகையை மனதில் வைத்து படையப்பாவை கோவில் வாசலில் கண்டதும் அடித்து துன்புறுத்த முடிவெடுத்தான். முதலில் அருட்சுவைக் கொண்ட அழகிய தமிழில் வேண்டாத புனிதம் நிறைந்த அகராதி வார்த்தைகளை வைத்து திட்டி தீர்த்தான். படையப்பா அதற்கு வழக்கம் போல் சிரிக்க படையப்பாவை அடித்து நைய புடைத்தான். அம்பாளை காண வந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சினிமாவில் ஏழைகளை ஓடி வந்து காப்பாற்றும் ஹீரோக்களும் ஹீரோயின்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து ஏழையை காப்பாற்றும் அரசியல் பிரமுகர் என்ன? ஏது? என்று கூட திரும்பி பார்க்காமல் அம்பாளை வேண்டிக்கொண்டிருந்தார். ஏன் இதை எழுதி கொண்டிருக்கும் நானும் வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் இதை போல் சம்பவங்களில் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யாமல் தான் இருந்தோம் என்பதையும் இங்கு நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.


இப்படி அடிவாங்கி கொண்டிருந்த படையப்பாவின் வாய் கிழிந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது, இருந்தும் அவன் சிறிதளவு கூட வெறுப்பை காட்டாமல் சிரித்துக்கொண்டே இருந்தான். அடித்து அடித்து கை வலிக்க அடிப்பதை தந்தைக்கு பிறக்காதவன் நிறுத்திய பொழுது அவனுக்கு குபீரென்று வேர்த்து கொட்டி மூச்சு வாங்க தொடங்கியது நிலைதடுமாறி கோவில் வாசலில் உள்ள படியில் சென்று அமர்ந்தான். இதை பார்த்த படையப்பா கருசனையோடு அருகிலிருந்த பூக்கடைகாரம்மா சொம்பில் குடிக்க வைத்திருந்த தண்ணீரை எடுத்து கொண்டு அவனிடம் கொடுத்து குடிக்குமாறு கைகாட்டினான். தந்தைக்கு பிறக்காதவனுக்கு குற்ற உணர்ச்சி! வேடிக்கை பார்த்தவர்களுக்கு பரவசம்! இதை மொபில் போனில் வீடியோ படம் பிடித்தவர்கள் கண்ணில் இரண்டு சொட்டு ஆனந்த கண்ணீர்! தந்தைக்கு பிறக்காதவன் சொம்பை உதறி வெட்கம் கொண்டு அங்கிருந்து நடந்து செல்ல படையப்பா தள்ளாடி கீழே விழப் போனான். அவன் விழும்போதும் கூட எல்லோரும் அவனை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு கை படையப்பாவை தாங்கி பிடித்தது.


அந்த கை தங்கமாய் ஜொலி ஜொலித்தது! பட்டு துணி போர்த்தியபடி கையில் சூலத்துடன் அம்பாள் நேரே வந்து படையப்பாவை கை தாங்களாக பிடித்து எழ வைத்துக் கொண்டிருந்தாள். அவள் கையால் படையப்பாவின் காயங்கள் மேல் தடவ காயங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் மறைந்தது! படையப்பா அம்பாளைப் பார்த்து கோபமாக கத்தினான் "என்ன மா நீ இப்படி? இங்க என்ன பார்க்க வந்துட்டே! உன்ன பார்க்க எத்தனை பேரு வந்திருக்காங்க பாரு! அவங்களெல்லாரையும் விட்டுட்டு என்னை மட்டும் பார்க்க வந்தா எப்படி? இது சின்ன அடி தான்! நான் பாத்துக்குறேன்! நீ போய் அவங்கள பாரும்மா!" என்று உரிமையோடு பேச, அம்பாள் "அவங்க யாரும் என்ன பார்க்க வரல! என் கிட்ட பேச வரல! என் நலம் விசாரிக்க வரல! எல்லாரும் அவங்க பாவத்தை கழுவவும் பாவத்திலுருந்து காப்பாத்தபடவும் தான் என் கிட்ட வந்திருக்காங்க! நீ மட்டும் தான் என் கிட்ட பேசுறே! நலம் விசாரிக்குற! அப்போ நான் உன்ன தான் பார்க்க வரணும்" "நீ என்ன தான் நியாயம் சொன்னாலும் சரி நான் ஒத்துக்க மாட்டேன்! அவங்க உன்ன பார்க்க வந்திருக்காங்க! போய் அவங்கள ஆசீர்வாதம் பண்ணு! உன்ன நான் சாயங்காலம் வந்து பாத்துக்குறேன்! நீ இப்போ நான் சொல்றத கேட்கலேன்னா, நான் உன்கிட்ட பேசவே மாட்டேன் பார்த்துக்கோ!" என்று படையப்பா கோபித்துக்கொள்ள, சிரித்த முகத்துடன் "சரி டா நான் போறேன்! மறக்காம சாயங்காலம் வா! உன்கிட்ட நிறைய பேசணும்! அப்படியே சந்திரமாவை கேட்டதா சொல்லு" என்று சொல்லி யார் கண்ணிலும் தென்படாமல் அம்பாள் கோவில் வாசலிருந்து நேரே கருவறைக்கு சென்று அவளிடத்தில் அமர்ந்தாள்.


சிரித்த முகத்துடன் அம்பாளுக்கு டாடா காட்டிவிட்டு படையப்பா நொண்டி நொண்டி நடக்க, விவரம் அறிந்து சந்திரம்மா ஓடி வந்து நொண்டியபடி நடக்கும் படையப்பாவை தாங்கி பிடிக்கின்றாள் "கூத்தியாளுக்கு பொறந்த நாயி எப்படி அடிச்சு இருக்கான் பாரு!! நாளைக்கு அவனை பார்ப்பேன்ல!! கால உடைச்சு அம்மணமா ஓட விடுறேனா இல்லியா பாரு!! எப்படி அடிச்சுயிருக்கான் பாவி!!" என்று அவள் கூற, படையப்பா "சந்திரம்மா அம்பாளுல உன்ன விசாரிச்சதா சொன்னா! சாயந்திரம் வா ஏதோ முக்கியமான விஷயம் பேசுனும்ன்னு சொன்னா நீயும் வாரியா?" என்று சிரித்த முகத்துடன் கேட்க, சந்திரம்மா "நீ சொல்லி என்னைக்கு டா எனக்கு புரிஞ்சு இருக்கு!!" என்று சொல்ல படையப்பா மழலைகள் பேசும் தெய்வ மொழியில் அன்று நடந்த விஷயத்தை பற்றி சந்திரம்மாவிடம் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தான். அவளும் அதற்கு "ம்ம்ம்" கொட்டி கொண்டு வந்தாள்.

மேற்குறிய இந்த சம்பவம் நான் அம்பாளை சந்தித்தபொழுது அவள் என்னிடம் கூறியது, இதை உண்மை என்று நம்புவதும் அல்லது இது சுத்த பொய் என்று நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.


இதை எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.0 views0 comments
bottom of page