Sivaraj Parameswaran
பறக்கும் பாவை
Updated: Aug 26, 2022

மனதில் உறுதி வேண்டும் என்ற வாசகத்தை பெருமாள் தெருவில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆரம்பித்த விவேகானந்தர் சங்கம் முன்பு உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது இதை வசித்தபடி சோமசுந்தரம் நடந்து செல்ல தன்னை மறந்து எதிரே வந்த யமஹா வண்டியின் மீது மோதிவிடுகிறார். அந்த 19 வயது மதிக்கதக்க பொடியன் வாயில் வந்த கெட்ட வார்த்தைக்கு அளவு கோல் வைத்தால் ஆயிரம் அளவு கோல் தேவைப்படும் அவ்வளவு அசிங்கமான வார்த்தைகள். போதா குறைக்கு பின்னால் அமர்ந்திருந்த அந்த பொடியனின் காதலியின் அர்ச்சனைகள். அவளுக்கு 18 வயது இருக்கும் போலும். கூனி குறுகிய சோமசுந்தரம் தட்டு தடுமாறி ஸாரி சொல்ல, கோபம் குறைந்த பாவை காதலனை கட்டியணைத்துக்கொண்டு சோமசுந்தரத்தை மன்னிக்கும் ஒரு பரிதாப பார்வை பார்த்து காதலனுக்கு அறிகுறி சொல்ல பாவையுடன் பறந்தது யமஹா வண்டி. அவமானமும் கோபமும் தலைக்கு ஏற சோமசுந்தரம் "கழிசடைங்க எங்கேயாவது லாரியில் அடிபட்டு சாவுதா இல்லையா பாரு" என்று தனுக்கு தானே முணுமுணுத்துக் கொண்டு பழையபடி வீடு நோக்கி நடக்கலானார்.
வீடு வந்து சேர்ந்த சோமசுந்தரம் மனைவி பங்கஜத்தை கூப்பிட பதில் ஏதும் இல்லை. பதறிய படி மனைவியை தேடி கொல்லை பக்கம் செல்ல! பங்கஜம் அங்கே தரையில் பேச்சு முச்சு இன்றி விழுந்து கிடக்கின்றார். என்ன செய்வதென்று தெரியாமல் அறைகூவலிட பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து என்ன ஏதென்று பார்க்க, அம்புலன்ஸ் அவசர உதவிக்கு போன் போகின்றது! ஆம்புலன்ஸ் இவர்கள் வாழும் தெருவிற்கு வர கொஞ்சம் சிரமம் கொள்ள! ஆம்புலன்ஸ் டிரைவர் சோமசுந்தரத்திற்கு போனில் "ஐயா இங்க ஏதோ அரசுக்கு எதிரா பேரணியாம் செம்ம டிராபிக்! பேசாம ஒரு ஆட்டோ எடுத்து GH போயிடுங்க! நான் இங்க மாட்டிட்டு இருக்கேன்" என்று சொல்ல, போன் அவரது கையிலிருந்து நழுவி தரையில் விழுந்து உடைக்கின்றது! சோமசுந்தரம் கதிகலங்கி தரையில் விழுந்து அழுகின்றார்!
டு-லெட் மாட்டிய வீட்டின் முன்பு என்ன கூட்டம் என்று கூட்டத்தை விளக்கி உள்ளே வந்த தம்பதியினர் பங்கஜம் மாமி சோமசுந்தரதின் நிலைமையை அறிகின்றனர். ஆம்புலன்ஸ் வராது தெருவில் இன்றைக்கு பார்த்து ஆட்டோவும் இல்லை எனபதை அறிந்து சோமசுந்தரம் கலங்கி நிற்கின்றார். மறுநொடி யோசிக்காத அந்த தம்பதி பங்கஜம் மாமியை எடுத்துக்கொண்ட ஆடவன், பாவையை வண்டியை ஓட்டச் சொல்ல அவன் பங்கஜம் மாமியை பிடித்து தட்டுத்தடுமாறி நடுவில் உட்காரவைத்து அவர்கள் பின்னே தாங்கி உட்காருகின்றான். யமஹா வண்டி வேகம் பிடித்தது, காலையில் சோமசுந்தரத்தை தாக்கிய அதே யமஹா வண்டிதான் இப்பொழுது பங்கஜம் மாமியை காப்பாற்ற போராடுகின்றது. பறக்கும் பாவை என்று வண்டியின் பின்னே எழுதிய தமிழ் வாசகத்தை சோமசுந்தரம் ஏறெடுத்து பார்த்த பொழுது கழிசடையாக தோன்றிய அந்த யுவாக்கள், தன்னுள் இருந்த கழிசடைக்குள் பூத்த வெண்தாமரையாய் தோன்றலானது!
இப்படிக்கு,
ஒரு கழிசடை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.