Sivaraj Parameswaran
முதல் நன்றி

நான் மட்டும் இவர்களை 2012-ல் சந்தித்திருந்தால் இன்று நான் ஒரு இயக்குனராக இருந்திருப்பேனோ என்னவோ? காரணம் என்னையும் என் கனவுகளையும் நம்பகத்தன்மையோடு என்னை விட நம்பியவர்கள் இவர்கள்.
இவர்களில் ஒருவர் சுதாகர், இவர் நம்பாவிட்டாலும் நம்பியது போல் என்னை நம்பவைப்பார். இன்னொருவர் கல்யாண், இவர் நான் என் சிந்தனைகளை நம்புவதை காட்டிலும் அவர் என் சிந்தனைகளை நம்புவார்!
இவர்களைப் போல் இன்னோருவரும் உள்ளார் அவர் தான் சரவணன் சார்! அவர் ஒரு முறை என்னிடம் சொன்னது இன்று நினைத்தாலும் மெய் சிலுர்க்க வைக்கின்றது. அவரின் நம்பிக்கை என் நம்பிக்கையை சிதறியடித்த தருணம் அது, அந்த நம்பிக்கை என்னவெனில் - "தம்பி சிவா வேணும்னா நான் எனக்கு ஊருல இருக்குற வீட்டை வித்து உனக்கு தரவா? அந்த பணத்தை வச்சு நீ படம் பண்ணிடேன்! இன்றைய நிலைக்கு அது ஒரு கோடி ரூபாய் போகும்!! அதுல கொஞ்சம் என் மகளோடே படிப்புக்கு எடுத்துக்கிட்டு மீதி உனக்கு தந்துடுறேன்! நீ படம் பண்ணிடுரியா?" அவர் சொன்னதை கேட்டு கொஞ்சம் திக்கு முக்காடி போனேன்! காரணம் அவரிடம் இருக்கும் ஒரே சொத்து அது! அதை விற்று எனக்கு படம் பண்ண தருகின்றார் என்றால்!! அவரின் நம்பிக்கையை என்ன வென்று சொல்வது? கண்கள் நிறைந்தது! வார்த்தைகள் தடுமாறின! அவரிடம் வேண்டாம் சார் என்றேன்! அவரின் அந்த நம்பிக்கை தளர்ந்த என் மனதிற்கு ஒரு புது தைரியத்தையும் புத்துணர்வையும் தந்தது!!
என் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்ததற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் சுதாகர் மற்றும் கல்யாண் தான். அவர்களின் அந்த ஐடியா தான் என் எழுத்துக்களுக்கும் கிறுக்கல்களுக்கும் உயிர் கொடுத்தது, அந்த ஐடியாத்தான் - www.sivarajparameswaran.com என் கிறுக்கல்களின் மொத்த தொகுப்பும் இதில் உள்ளது! இதில் உள்ளதை எத்தனை பேர் படித்திருப்பார்களோ தெரியாது! ஏன் என் தமிழ் தெரிந்த சொந்தங்களும் நண்பர்களும் எத்தனை பேர் படித்திருப்பார்களோ? அதற்கு காரணம் அவர்களின் நேரமின்மையே தவிர வேறொன்றும் இல்லை! ஆனால் கல்யாண்யும், சரவணன் சாரும் நான் எழுதிய அத்தனை கிறுக்கல்களையும் படித்திருக்கிறார்கள். சில கதைகள் சுமாராகவே இருக்கும் சிலவை சுமாராக கூட இருக்குமோ என்னவோ? இருந்தும் என்னை ஊக்குவிப்பார்கள்! ஒவ்வொருமுறையும் கதையை படித்து முடித்துவிட்டு எனக்கு ஒரு குறுந்செய்தி அனுப்புவார்கள்! அந்த குறுந்செய்தி தான் எனக்கு தங்க மெடல் வாங்கிய உணர்வு தரும்! அந்த உணர்வை தந்த அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்!
இதில் குறிப்பிட இனொருவரும் உள்ளார் அவரை நான் X என்று குறிப்பிடுகின்றேன்! அவரால் எல்லாவற்றையும் படிக்க இயலாது ஆனாலும் இயன்றவரை எனக்காக நான் எழுதியதற்காக படிப்பார்! இன்றளவும் என் மீது என்னை விட மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்! யார் என்னை என்ன குறைசொன்னாலும் என்னை குறைசொல்லாதவர்! என்னை எதிலும் விட்டுக்கொடுக்காதவர்! காலத்தின் கட்டாயத்தால் அவரை X என்று குறிப்பிடுவதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என் அன்பு மனைவிக்கும், தாய் தந்தைக்கும், அன்பு சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் என்னை மறவாமல் நினைவில் வைத்திருக்கும் அணைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த வருடத்தின் முதல் பதிவை இங்கு மேற்கூறியவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்!
இந்த பதிவையும் யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் கண்டிப்பாக அந்த இரண்டு பேர் படிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு பதிவிடுகின்றேன்! முக்கியமாக சுதாகர் எனது எந்த தமிழ் பதிவையும் படித்திருக்க மாட்டார்! இருப்பினும் படிப்பதாக உறுதி கொள்வார்!! இந்த பதிவிற்கும் அந்த உறுதி தொடரும்...
இந்த வருடம் இனிய வருடமாக அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உங்கள் அன்பார்ந்த,
சிவராஜ் பரமேஸ்வரன்.