Sivaraj Parameswaran
28.777 வினாடிகள்
Updated: Aug 26, 2022

எதை பற்றி எழுதுவது யாரை பற்றி எழுதுவது என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது என் கற்பனை கதாபாத்திரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது! அது என்ன கற்பனை கதாபாத்திரம்? கற்பனைச் சிந்தனை அதில் வாழும் எனது கதாபாத்திரங்கள்! வெறும் கற்பனையே! இந்த கற்பனையில் கதாபத்திரங்களாய் வரும் பலரும் எனக்குள்லேயும் வெளியேயும் வாழும் மனிதர்களே ஆவர்! அவர்களின் வாழக்கையில் நான் குறுக்கிடாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்!
உதாரணத்திற்கு எனக்கு வேண்டப்பட்ட ஒரு பெண் அவளை நான் காதலித்துக்கொண்டு இருக்கின்றேன் என்று வைத்துக்கொள்வோம்! அவளை கற்பனையில் இன்றளவும் நான் காதலித்துக்கொண்டு, கற்பனையில் அவளுடன் குடும்பம் நடத்தி கொண்டிருக்கின்றேன். ஆனால் நிஜத்தில் அவள் இன்னொருவரின் மனைவி. கேவலமான சிந்தனை தான் ஆனால் நிஜத்தில், அவளை நான் கண்டு வருடங்கள் பல ஆகிவிட்டன! சொல்ல போனால் இறந்தும் போய் இருப்பாள்! யாருக்கு தெரியும்.
இது தான் எனது கற்பனை உலகம்! இந்த கற்பனை உலகத்தில் நான் தான் கடவுள் நான் வைத்ததே சட்டம்! இந்த உலகத்தை நான் தினந்தோறும் பாலூற்றி நீரூற்றி தேனூற்றி வளர்த்து வருகின்றேன்! இதில் பிரம்ம தேவனாக எனது கதாபாத்திரங்களை நான் சிருஷ்டிப்பேன்! விஷ்ணுவாக அவர்களை காப்பேன்! வேண்டாத பட்சத்தில் சிவனாக அவர்களை அழிக்கவும் செய்வேன்! இந்த கற்பனை உலகில், நானே கடவுள்! நான் மட்டுமே கடவுள்!!
இவ்வாறாக கடவுளாக வாழ்ந்து வந்த என் கற்பனை உலகில் புதிதாக ஒரு கதாபாத்திரம் எனது அனுமதி இன்றி என் கற்பனை உலகில் நுழைந்தது! கடவுளாகிய என்னால் கூட அந்த கதாபாத்திரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை! அந்த கதாபாத்திரம் என்னுள் ஒரு மாயையாய் ஆதிக்கம் செலுத்த துவங்கியது! அந்த கதாபாத்திரம் தன்னை சூர்ப்பநகை என்று பெயர் சூடிக்கொண்டு, தன்னை இன்னொரு கடவுளாக பிரக்ஞை செய்து கொண்டாள். என் பேச்சை அறவே கேட்க மறுத்தாள்! என் அனுமதியின்றி என் உலகை அவள் விருப்பத்திற்கு மாற்றி அமைக்கவும் தொடங்கினாள்! என்ன செய்வதென்று தெரியாமல் அவளை வெறுக்கவும் முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டிருக்கின்றேன்.
கதையின் நடுவே ஒரு முக்கிய குறிப்பு : அவள் பேரழகி அவள் என்னை வசியம் செய்யும் முயற்சில் என்னை தினந்தோறும் அவள் கண்களால் என் காமத்தை தூண்ட முயற்சி செய்தாள். ஆனால் நான் ஏக பத்தினி விரதன்! என் காமத்தீயை அடக்கி கொண்டு ராமனாக கட்டுக்கோப்புடன் இருந்தேன். இப்படி நான் சொல்லிக்கொண்டிருக்க அவள் என்னை ஆரத் தழுவி என் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்! என் கண்கள் காமத்தீயால் சொருகியது! என் சக்திகள் அவளுள் அடங்கியது! அவள் என்னை ஆட்கொண்டாள்! நான் அவளுக்கு ஆட்பணிந்தேன்! என் காமத்தை என் அனுமதியின்றி சூறையாடினாள்! நான் மானிடம் சிக்கிய சிங்கம் போல துவண்டு போனேன்! அவளின் முத்தம் என் உயிர் மூச்சை உறிஞ்சி எடுப்பது போலிருந்தது...
நிஜத்தில் : நர்ஸ் சிவலிங்கத்திற்கு வெண்டிலேட்டர் வழியாக காற்றை உள்ளே செலுத்த டாக்டர் ஐ.வி-யில் ஏதோ மருந்தை ஊசி மூலமாக ஏற்றுகின்றார். சிவலிங்கம் மூச்சிற்காக துடிதுடிக்க மானிட்டரில் நாடித்துடிப்பு மெதுவாக குறைந்து கொண்டிருந்தது. அலாரம் சத்தம் ஒலிக்க சிவலிங்கத்தின் நாடித்துடிப்பு நிற்கின்றது. டாக்டர் ஷாக் கொடுத்து சிவலிங்கத்தை உயிர்ப்பிக்க முயல்கின்றார்...
கற்பனையில் : அவள் என்னை என் கண்களுள் பார்க்க என் உயிர் அவளுக்குள் அடிமை ஆனதை உணர்ந்தேன்! அவளின் அந்த உதட்டின் ஓர புன்சிரிப்பு என்னை கலங்கடித்தது! அவளின் நறுமணம் என்னை மயக்கியது! அவள் என்னை தழுவி மீண்டும் முத்தும் மிட என்னுள் பட்டாம்பூச்சிகள் மின்னல் வேகத்தில் பறப்பதை உணர்ந்தேன். மீண்டும் நாங்கள் இரண்டறக்கலந்தோம்...
நிஜத்தில் : டாக்டர் நர்ஸிடம் சைகையால் போதும் சூடாக ஒரு கப் காபியை தனது அறைக்கு எடுத்து வருமாறு கூறி அறையை விட்டு வெளியே செல்ல, கம்பி நாற்காலியில் அமர்ந்திருந்த சிவலிங்கத்தின் மகன் மொபைலில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தான்! டாக்டர் வருவதை பார்த்து மொபைலில் இருந்து அவரை ஏறெடுத்து பார்க்க, டாக்டர் அவனை கண்டு சோகமாக முகம் சுழிக்க "அப்பா!! அப்பா!! அப்பா!!" என்று கதற ஆரம்பித்தான், அதுவரை கீழ் வீட்டு பங்கஜம் பற்றி போனில் மேல் வீட்டு அமலாவிடம் புறம் பேசிக்கொண்டிருந்த மகள் "ஐயோ! அப்பா போயிட்டீயே!" என்று கதற டாக்டர் திபு திபுவென்று முழித்தார். சிவலிங்கத்தின் மகனை டாக்டர் சைகையால் அருகில் அழைத்து காதோரமாக "யோவ் அவரு இன்னும் உயிரோடு தான் இருக்காரு!! செத்த பிறகு சொல்லறேன்! ஓவர் சீன் போட்டு காரியத்த கெடுத்துறாத!!"
உண்மையில் : சிவலிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்! டாக்டர் கொடுத்த மருந்தில் உள்ள மயக்கும் தன்மை சிவலிங்கத்தின் கற்பனை திறனை அதிகரிக்கச் செய்தது. அவ்வாறு அதிகரித்த கற்பனை திறன் அவரை புதிய அவதாரமாக உயிர்ப்பிக்கின்றது! அதில் வரும் சூர்ப்பநகை என்ற கதாபாத்திரம் பற்றி சத்தியமாக எனக்கு தெரியாது அதை நான் சிருஷ்டிக்க வில்லை. அது சிவலிங்கத்தின் சிருஷ்டி அது சிவலிங்கத்திற்கு மட்டுமே தெரிந்த உண்மை.... அவள் யார் என்ன வென்று சிவலிங்கம் மீண்டும் எழுந்து வந்து சொன்னால் ஒழிய எனக்கும் இதை படிக்கும் உங்களுக்கும் தெரியாது... இந்த கற்பனைகள் அனைத்தும் 28.777 வினாடிகளில் நடந்தவை...
கற்பனையில் எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.